இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தை எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதற்கான அழைப்பை விடுத்துள்ளதாகவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எம்பி செல்வம் அடைக்கலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நிரந்தரமான மற்றும் நியாயமான தீர்வை பெற்றுக் கொள்ளும் வகையில் அந்த பேச்சுவார்த்தை அமைய வேண்டுமென சபையில் சுட்டிக்காட்டிய அவர், இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கம் மனசாட்சியுடன் நடைபெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை,இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளில் இந்தியா மேற்பார்வை பொறுப்பை ஏற்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார். இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்திலிருந்தே தலையீடு செய்து வந்துள்ளது. தற்போது பேச்சுவார்த்தை நடைபெறும் போது மேற்பார்வை பொறுப்பை இந்தியா ஏற்குமானால் நியாயமான தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சேர்பெறுமதி வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை திருத்தச் சட்டமூலம் ஆகியவை மீதான விவாதத்தில்உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், வட மாகாணத்தில் இன்றும் யுத்த சூழல் போன்ற நிலைமை தான் காணப்படுகிறது. துப்பாக்கிச் சத்தங்கள் மாத்திரமே இல்லை, ஆனால் போர் சூழலில் அனுபவித்த சகல துன்பங்களையும் எமது மக்கள் அனுபவித்து வருகின்றார்கள்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்த பேச்சுவார்த்தை சர்வதேசத்தின் அழுத்தம் மற்றும் பொருளாதார பாதிப்பு ஆகிவற்றை முன்னிலைப்படுத்தியதாக அமைந்து விடக் கூடாது.
நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு மனசாட்சியின் அடிப்படையில் பாராளுமன்றத்தின் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும்.இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தீர்வு காணும் ஒரு பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும்.