எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன் நடித்த பழைய படங்கள் டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு தொடர்ந்து மறு ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. இந்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதுபோல் ரஜினிகாந்த் நடித்த படங்களையும் மறு ரிலீஸ் செய்ய தொடங்கி உள்ளனர்.
ஏற்கனவே அவரது ‘பாட்ஷா’ படம் டிஜிட்டலில் வந்தது. தற்போது ரஜினிகாந்தின் பிறந்த நாளையொட்டி ‘சிவாஜி, தர்பார், 2.0’ ஆகிய படங்களை மறு ரிலீஸ் செய்துள்ளனர். வருகிற 15-ந் தேதி வரை இந்த படங்கள் தியேட்டர்களில் திரையிடப்படும் என்று அறிவித்து உள்ளனர்.
ரஜினியின் ‘பாபா’ படத்தையும் டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்கின்றனர். இது ரஜினி ரசிகர்களை உற்சாகமடையை செய்துள்ளது. வெற்றி பெற்ற ரஜினியின் வேறு சில படங்களையும் டிஜிட்டலில் புதுப்பித்து மறு ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடக்கின்றன.
ஜப்பானில் ரஜினிகாந்தின் பழைய படங்கள் வசூலை குவிக்கின்றன. ‘முத்து’ படம் அங்கு பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ‘முத்து’ படத்தின் வசூலை சமீபத்தில் ஜப்பான் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்ட தெலுங்கு படமான ‘ஆர் ஆர் ஆர்.’ படத்தால் நெருங்க முடியவில்லை.