இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் தரப்பு தமிழ் தரப்புடன் இணைந்து செல்ல வேண்டியதில்லை. முஸ்லிம்கள் தனித் தரப்பாக செல்ல வேண்டியதே அவசியமென எம்.முஷரப் எம்.பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அந்த பேச்சுவார்த்தையின் போது முஸ்லிம் தரப்பு தனியாகவும் மலையக தரப்பு தனியாகவும் பேச்சுவார்த்தைக்கு சென்று, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது சிறந்ததென்றும் அவர் தெரிவித்தார்.
ஏற்கனவே ஒஸ்லோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழ் தரப்புடன் முஸ்லிம் தரப்பு ஒரு குழுவாகவே கலந்து கொண்டது. அந்த குழு மீது உரிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அவர், இனிவரும் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம் தரப்பு தனியாக செல்ல வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. முஸ்லிம் தரப்பு தனியாக சென்று அவற்றுக்கு தீர்வு காண வேண்டிய அவசியம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, தமிழ்த் தரப்பினர் மூன்று நிலைப்பாட்டிலிருந்து கொண்டு அரசியல் தீர்வு பேச்சுவார்த்தைக்கு செல்லாது அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரே நிலைப்பாட்டுடன் அதில் கலந்து கொள்வது அவசியமென்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், சி.வி. விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என மூன்று தரப்புகளாக பிளவுப்பட்டுள்ளதால் அவர்கள் ஒன்றிணைந்த நிலைப்பாட்டுடன் பேச்சுவார்த்தைக்கு செல்வது சிறந்ததென்றும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சேர் பெறுமதி வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் உண்ணாட்டரசிறை திருத்தச் சட்டமூலம் ஆகியவை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.