யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 3 வருடங்களின் பின்னர் இன்று (12) மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, இன்று (12) காலை சென்னையில் இருந்து பலாலியிலுள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானமொன்று சுமார் 3 வருடங்களின் பின்னர் சேவையிட் ஈடுபட்டது.
Alliance Air விமான சேவை, இந்தியாவில் இருந்து பலாலி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு வாரத்தில் நான்கு நாட்களுக்கு சேவையில் ஈடுபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு வழி விமான சேவைக்கு அண்ணளவாக 90 நிமிடங்களே எடுக்குமென தெரிவிக்கப்படுகின்றது.
தற்போதுள்ள அதன் ஓடுபாதையில் 75 ஆசனங்களைக் கொண்ட விமானங்களே தரையிறங்க முடியும் என்பதோடு, பலாலி, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் அபிவிருத்தி பணிகள் 2,250 மில்லியன் செலவில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பலாலியில் உள்ள விமான நிலையம் 2019 ஒக்டோபரில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையமாக, யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டதோடு, அதன் முதல் விமானம் சென்னையில் இருந்து முன்னெடுக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட விமான நிலையத்தின் அபிவிருத்திப் பணிகள் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளாலும் நிதியளிக்கப்பட்டது.
பலாலியில் இருந்து இந்தியாவுக்கான விமான சேவைகள் கொரோனா தொற்று மற்றும் பலாலி விமான நிலைய அபிவிருத்திப் பணிகள் காரணமாக 2 வருடங்களுக்கு முன்னர் 2020 இல் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதன் மூலம், நாட்டின் சுற்றுலாத் துறைக்கு அது உதவியாக இருக்கும் என்பதோடு, நலிவடைந்திருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Alliance Air ஆனது, இந்தியாவின் தேசிய விமான சேவையான Air India வின் ஒரு பகுதியாக இருந்ததோடு, இவ்வருடத்தின் ஆரம்பத்தில் அது TATA குழுமத்திடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.