சேலம் மாவட்டம் ஆத்தூரில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்த மழையைக் கண்டோ, இந்த அரசை கண்டோ பயப்படுகிற கூட்டம் அதிமுக அல்ல. நாளைய தினம் தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின அவர்களின் மகன் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்களுக்கு முடிசூட்டு விழா நடக்கிறது.
என்ன நடக்கிறது முடிசூட்டு விழா நடக்கிறது. மிகப்பெரிய தியாகத்தை செய்த செம்மல், நாட்டுக்கு உழைத்த மாமனிதன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அவருக்கு நாளைக்கு முடிசூட்டு விழா நடக்கிறது.
கருணாநிதி அவர்கள் முதல்-அமைச்சராக இருந்தார். அவருக்கு பின்னால் அவருடைய மகன் ஸ்டாலின் முதல்-அமைச்சர் ஆனார். அவருக்கு அடுத்து மு.க.ஸ்டாலின் அவர்களின் மகன் உதயநிதியை திமுகவின் தலைவர்களில் ஒருவராக கொண்டு வருவதற்கு தான் அந்த முடி சூட்டு விழா.
உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சரானால் தமிழ்நாட்டில் தேனாறும், பாலாறும் ஓடப்போகிறதா என்ன?. ஏற்கனவே எல்லா துறைகளிலும் ஊழல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அவர் வந்தால் அந்த ஊழலுக்கு எல்லாம் தலைவராக செயல்படுவார்.
குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும், வாரிசு அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும். ஏனென்றால் நாட்டு மக்களுக்கு எந்த ஒரு நன்மையும் கிடைக்காத ஆட்சி என்றால் அது திமுக ஆட்சி. குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
மாநிலத்துக்கு ஒரு முதல் அமைச்சர் தான் இருப்பார். ஆனால், தமிழகத்துக்கு 4 முதல் அமைச்சர்கள் உள்ளனர்.
மு.க.ஸ்டாலின், அவருடைய மனைவி, அவருடைய மகன், அவருடைய மருமகன் ஆகியோர் தான் 4 முதல் அமைச்சர்கள். திமுக என்றால் குடும்ப ஆட்சி, குடும்ப கட்சி அது கட்சி அல்ல கார்ப்பரேட் கம்பெனி.
அதிமுகவில் விசுவாசமாக இருந்தால், உழைப்பவர் எவராக இருந்தாலும் அவருடைய வீட்டு கதவை தட்டி பதவி கொடுக்கின்ற கட்சி அதிமுக. சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கூட எம்.எல்.ஏ, அமைச்சர், நாடளுமன்ற உறுப்பினர், முதல் அமைச்சர் கூட ஆகக்கூடிய கட்சி அதிமுக. இவ்வாறு அவர் கூறினார்.