விஷால் நடித்திருக்கும் ‘லத்தி’, வரும் 22-ம் தேதி வெளியாகிறது. நடிகர்கள் ராணாவும் நந்தாவும் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சுனைனா, சிறுவன் ராகவ் உட்பட பலர் நடித்திருக்கின்றனர். சில படங்களில் போலீஸ் அதிகாரியாக, அதிகாரம் காட்டிய விஷால், இதில் கான்ஸ்டபிளாக நடித்திருக்கிறார். படம் பற்றி அவரிடம் பேசியதில் இருந்து…
காவலரோட வாழ்க்கையை சொல்ற படமா?
சாதாரண கான்ஸ்டபிள், தன் குடும்பத்துக்கு ஒரு பிரச்சனைன்னு வரும்போது என்ன செய்றார்ங்கறதுதான் கதை. முருகானந்தம் அப்படிங்கற கான்ஸ்டபிளா நடிச்சிருக்கேன். இயக்குநர் வினோத்குமார் கதை சொல்லும்போது, 7 வயசு பையனுக்கு அப்பாவா நடிக்கணும்னு சொன்னார். முழு கதையையும் சொல்லுங்கன்னு கேட்டேன். வழக்கமா போலீஸ் கதைன்னா அதிகாரி கேரக்டராவே இருக்கும். இதுல கான்ஸ்டபிள் கேரக்டர். திரைக்கதை அருமையா இருந்தது. இந்தப் படத்துக்கான என்னோட பாடி லாங்குவேஜ் சவாலா இருந்தது. அதோட அப்பா- மகன் பாசத்தை சொல்றதாகவும் இருந்தது. உடனே ஓகே சொல்லிட்டேன்.
45 நிமிடம் ஆக்ஷன் காட்சி இருக்காமே?
எனக்கு தெரிஞ்சு, அதிக நாட்கள் ஆக்ஷன் காட்சி ஷூட் பண்ணனின படம் இதுவாகத்தான் இருக்கும். கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிடத்தில், நடந்த அந்த ஆக்ஷன் காட்சிகள்ல ரொம்ப ரிஸ்க் எடுத்து நடிச்சிருக்கோம். நான் ரிஸ்க் எடுத்தது கூட பரவாயில்லை. ராகவ், எடுத்ததுதான் ஆச்சர்யம். ரொம்ப சிறப்பா நடிச்சிருக்கான். பல முறை எனக்கு ரத்தக் காயம் ஏற்பட்டிருக்கு. பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் ரொம்ப அருமையா அந்தக் காட்சிகளை அமைச்சிருக்கார். அதே போல, யுவன் சங்கர் ராஜாவோட பின்னணி இசையும் பேசப்படும்.
காவலர் குடும்பங்களுக்கு இந்தப் படத்தை காண்பிக்கப் போறீங்களாமே?
ஆமா. எனக்குத் தெரிஞ்ச அதிகாரி மூலமா அதுக்கான முயற்சி பண்ணியிருக்கோம். ஒவ்வொரு காவலரும் குடும்பத்தோட பார்க்க வேண்டிய படம், இது. அதுக்காக நாங்களே அந்த முயற்சியை எடுத்திருக்கோம். ஏன்னா, இந்தப் படத்தை நான் அதிகம் நம்பறேன். 5 வருஷம் கழிச்சு பார்த்தா கூட, சண்டக்கோழி, இரும்புத்திரை, பாண்டிநாடு படங்கள் மாதிரி இந்தப் படமும் எனக்குப் பெருமையா இருக்கும்.
முதன் முறையா ‘பான் இந்தியா’ முறையில உங்க படம் ரிலீஸ் ஆகுது…
ஏற்கனவே என் படங்கள் மற்ற மொழிகள்ல வெளியாகிட்டுதான் இருக்கு. இந்தக் கதை எல்லா பகுதிக்கும் பொருந்தும் அப்படிங்கறதால கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்து பண்றோம். இந்தியில ஒரு வாரம் கழிச்சு, இந்திப் படம் மாதிரியே வெளியிட இருக்கிறோம். ‘பான் இந்தியா’ங்கறது கொஞ்சம் எச்சரிக்கையா செயல்பட வேண்டிய விஷயம். நிறைய பேர் முயற்சி பண்றாங்க. கதைஎல்லாருக்கும் டச் பண்ற மாதிரி இருந்தா பண்ணலாம்.
அடுத்து ‘மார்க் ஆண்டனி’யில 2 கேரக்டர் பண்றீங்க..
அப்பா – மகன் கேரக்டர். ரொம்ப வித்தியாசமான கதை. எஸ்.ஜே.சூர்யாவுக்கும் 2 வேடம். அவரோட நடிச்சது நல்ல அனுபவம். அவர் எனக்கு அண்ணன் மாதிரி. இதுக்குப் பிறகு ‘துப்பறிவாளன் 2’ படத்தை இயக்கப் போறேன். அதையடுத்து விலங்குகளை வச்சு ஒரு படம் இயக்கும் ஐடியா இருக்கு. அது எனக்கு கனவு படம். பிறகு விஜய்கிட்ட கதை சொல்லி, அவருக்குப் பிடிச்சிருந்தா, இயக்கும் ஆசை இருக்கு.
இயக்குநர் மிஷ்கினோட மீண்டும் இணைய வாய்ப்பிருக்கா?
மிஷ்கின் கூப்பிட்டா, கண்டிப்பா அவர் ஆபீஸுக்கு போவேன். அதுல எனக்கு எந்தப்பிரச்னையுமில்லை. அவரோட படங்களின் ரசிகன் நான். அவர் சிறந்தஇயக்குநர். ஆனா, ஒரு தயாரிப்பாளரா என்னால அவரை மன்னிக்கவே முடியாது. எனக்கு நடந்த அந்தத் துரோகத்தை மறக்கவே முடியாது.
உங்க நண்பர் உதயநிதி அமைச்சராகி இருக்கார். அவருக்கு ஒரு கோரிக்கை வைக்கணும்னா என்ன வைப்பீங்க?
தென்னிந்திய சினிமாவின் ஆரம்பம் சென்னைதான். ஆனா, இங்க வசதியான ஃபிலிம் சிட்டி இல்லை. வெளிமாநிலத்துக்குத் தான் போக வேண்டியிருக்கு. தமிழ்நாட்டுல அனைத்து வசதிகளோட கூடிய ஒரு பிலிம்சிட்டியை அரசு உருவாக்கணும்னு கோரிக்கை வைப்பேன்.