எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் 2023 முதல் தினமும் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தெரிவிக்கப்படும் கருத்துகளில் எவ்வித உண்மையுமில்லை என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயற்பாட்டிற்கு அவசியமான நிலக்கரி கொள்வனவு செய்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக, 300 மெகா வாற்று மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் போவதன் காரணமாக, டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் 10 மணித்தியால மின் வெட்டு மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளதாக, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தது.
இந்நிலையிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர குறித்த கருத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.
இன்று (21) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அத்துடன் குறித்த கருத்தை வெளியிட்ட மின்சார பொறியியலாளர் சங்கத்தின் தலைவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.