இந்திய எல்லையை இனி யாராலும் மாற்ற முடியாது. இதுவரை இல்லாத அளவுக்கு எல்லையில் இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த 9-ம் தேதி அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மாவட்டம், யாங்சி எல்லைப் பகுதியில் சுமார் 600 சீன ராணுவ வீரர்கள் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களைத் தடுத்து நிறுத்திய இந்திய ராணுவ வீரர்கள், தக்க பதிலடி கொடுத்து விரட்டியடித்தனர்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறும்போது, “இந்திய நிலப் பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது. இந்தியா மீது போர் தொடுக்க சீன ராணுவம் தயாராகி வருகிறது. ஆனால், மத்திய அரசு உறங்கிக் கொண்டிருக்கிறது’’ என்று குற்றம் சாட்டினார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதில் அளித்துள்ளார். தனியார் ஊடக நிகழ்ச்சியில் அவர் நேற்று பேசியதாவது: சிலர் (ராகுல் காந்தி) அபாண்ட மான குற்றச்சாட்டுகளைச் சுமத்துகின்றனர்.
அவற்றில் துளியும் உண்மை கிடையாது. கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு எல்லைப் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்திய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய எல்லையை யாராலும் தன்னிச்சையாக மாற்ற முடியாது. குறிப்பாக, சீனாவால் எல்லைக் கோட்டை மாற்ற முடியாது. சீனாவின் அத்துமீறல்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்.
ராகுல் காந்தியின் உத்தரவின்படி எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்கள் செல்லவில்லை. பிரதமர் மோடியின் உத்தரவின்படியே எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்கள் சென்றனர்.
கடந்த 1990-ம் ஆண்டில் இந்திய சந்தை திறந்துவிடப்பட்டது. இதன் காரணமாக சீனாவில் இருந்து இறக்குமதி அதிகரித்தது. இந்திய தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்படாததால், வெளி நாடுகளின் இறக்குமதி சதவீதம் உயர்ந்தது.
கடந்த 30 ஆண்டுகளில் ஏற்பட்ட விளைவுகளை 5 ஆண்டுகளில் மாற்றிவிட முடியாது. எனினும், இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் மக்களவையில் நேற்று பேசும்போது, “அருணாச்சல பிரதேச எல்லை விவகாரத்தில் அரசியல்ரீதியாக விமர்சிப்பதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால், ராணுவ வீரர்கள் அடிவாங்குகிறார்கள் என்பது போன்ற கருத்துகள் மிகுந்த வேதனை அளிக்கின்றன.
இந்திய ராணுவ வீரர்களை அவமதிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அருணாச்சல பிரதேச எல்லைப் பகுதிகளில், சுமார் 13,000 அடி உயரத்தில் நமது வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களை ஊக்கப்படுத்தி பாராட்ட வேண்டியது நமது கடமை’’ என்றார்.
பதற்றம் நீடிக்கிறது: அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ள சிகாட்சி பகுதியில் சீன விமான தளம் அமைந்துள்ளது. அங்கு போர் விமானங்களும், ட்ரோன்களும் நிறுத்தப்பட்டிருப்பது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
மேலும், அருணாச்சல எல்லைப் பகுதிகளில் சீன ட்ரோன்கள் அடிக்கடி தென்படுகின்றன. சீன ராணுவம் சில நாட்களுக்கு முன்பு போர் ஒத்திகையும் நடத்தியுள்ளது. இதன் காரணமாக எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.
இதற்குப் பதிலடியாக இந்திய விமானப் படை அண்மையில் போர் ஒத்திகை நடத்தியது. அத்துடன், இந்திய போர் விமானங்கள் மற்றும் ட்ரோன்கள், அருணாச்சல பிரதேச எல்லையில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்திய கடற்படையைச் சேர்ந்த பி-81 ரக கண்காணிப்பு விமானம் மற்றும் கார்டியன் வகையைச் சேர்ந்த ட்ரோன்கள் அருணாச்சல பிரதேச எல்லையில் சீனப் படைகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றன.
சீனாவின் அச்சுறுத்தல்களை முறியடிக்க, அருணாச்சல பிரதேசத்தின் எல்லைப் பகுதிகளில் சுமார் 1,748 கி.மீ. தொலைவுக்கு புதிதாக நெடுஞ்சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அடர்ந்த மலைப் பகுதியில் அமைக்கப்படும் இந்த சாலை 2026-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ராணுவ வீரர்கள் விரைவாக எல்லைப் பகுதியை சென்றடைய முடியும் என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.