சீனாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட கொரோனா பெருந்தொற்று பின்பு உடனடியாக அரசின் பெருமுயற்சியால் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், உலக நாடுகளில் பரவ தொடங்கி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனாவின் பல அலைகளை சந்தித்த பல நாடுகளும், ஊரடங்கு, தடுப்பூசி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இந்த நிலையில், இரண்டரை ஆண்டுகளுக்கு பின்னர், குளிர்கால சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.
தினசரி தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 1-ந்தேதி முதல் 20-ந்தேதி வரையிலான நாட்களில் சீனாவில் 24 கோடியே 80 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று தகவல் கசிந்தது.
இதுபற்றி டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் நீரஜ் குமார் குப்தா கூறும்போது, கணிதமுறை கணக்குகளின்படி, சீனாவில் 10 கோடி பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டு இருக்க கூடும்.
50 லட்சம் பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டும், 10 லட்சம் உயிரிழப்பும் ஏற்பட்டு இருக்க கூடும். இது மிக அதிக எண்ணிக்கை என கூறியுள்ளார். இந்தியாவில் முன்பு ஏற்பட்ட அதே நிலையை சீனா தற்போது அடைந்துள்ளது.
ஆனால், இந்தியா தற்போது கொரோனாவுக்கு எதிராக போராடுவதில் நன்றாக அனுபவம் பெற்று விட்டது என அவர் கூறுகிறார். நாம் முதலில் கொரோனா முதல் அலையையும் மற்றும் 2-வது அலையில் தீவிரம் வாய்ந்த கொரோனாவின் டெல்டா வகையையும் எதிர்கொண்டோம்.
ஒமைக்ரானின் 3-வது அலையையும் எதிர்கொண்டோம்.
அது அவ்வளவு தீவிரம் கொண்டிருக்கவில்லை. ஆனால், அதிக தொற்றும் தன்மை கொண்டிருந்தது என கூறியுள்ளார். சீனாவின் ஊரடங்கு திட்டங்களால் அந்நாட்டு மக்களுக்கு குறைந்த நோயெதிர்ப்பாற்றல் காணப்படுகிறது என அவர் கூறியுள்ளார்.
சீனாவில் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் பூஜ்ய கொரோனா கொள்கை தளர்த்தப்பட்ட பின்னர் 20 நாட்களில் 25 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவிய, சீனாவின் அரசு ஆவணங்கள் பற்றி கசிந்த தகவல்களை குறிப்பிட்டு ரேடியோ ப்ரீ ஆசியா தெரிவித்து இருந்தது. இது சீன மக்கள் தொகையில் 17.65 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.