நடிகர் விஜய் நடித்துள்ள திரைப்படம் “வாரிசு”. இப்படத்தில் விஜய்-க்கு ஜோடியா ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம், சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்.
வாரிசு படத்திற்கு தமன் இசையமைத்துள்ள நிலையில், ஏற்கனவே இப்படத்தில் இருந்து ரஞ்சிதமே, தீ தளபதி, ஆராரிராரோ ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இவ்விழாவுக்கான அனுமதி பாஸ்கள் அனைத்து மாவட்ட விஜய் தலைமை மன்ற நிர்வாகிகள் மூலம் ரசிகர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், பாஸ் கிடைக்காத ரசிகர்களில் சிலர் தடையை மீறி உள்ளே வந்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சூழலில் கிரே கலர் சட்டை, வெள்ளை பேண்ட் சகிதம் மாஸ்ஸாக விஜய் என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் விஜய்யின் அப்பாவும், அம்மாவும் கலந்து கொண்டதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே இசை வெளியீட்டு விழாக்களில் நடிகர் விஜய் வழக்கமாக குட்டி கதை ஒன்று சொல்வது வழக்கம்.
அதேபோல இன்று நடைபெற்ற வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் விஜய் பேசியபோது ஒரு குட்டி கதை சொன்னார். அதில், “ஒரு குடும்பத்தில ஒரு அப்பா அம்மா தங்கை அண்ணன் இருக்காங்க.
அப்பா தினமும் குழந்தைகளுக்காக சாக்லேட் வாங்கிட்டு வராரு. தங்கச்சிக்கு கொடுத்த சாக்லேட்டை தினமும் உடனே சாப்பிட்ருவாங்க. அண்ணன் மட்டும் சாக்லேட்டை ஒளிச்சு வைச்சு சாப்பிடுவான்.
ஒரு நாள் தங்கை, அண்ணன்கிட்ட அன்புன்னா என்னனு கேட்கும் போது, நீ எடுப்பனு தெரிஞ்சும் நான் அதே இடத்துல திரும்ப சாக்லேட் வைக்கிறேன்ல அதுக்கு பேரு தான் அன்பு…. அன்பு தான் உலகத்தை ஜெயிக்க கூடிய ஆயுதம்.
அதில் ஒன்னு உறவுகள், மற்றொன்று நம்மை விட்டு கொடுக்காத நண்பர்கள். இந்த இரண்டு உறவுகள் இருந்தாலும் போதும். இரத்த தானம் செயலியை நான் தொடங்க காரணம் இரத்தத்திற்கு மட்டும் தான் வேறுபாடு கிடையாது, உயர்ந்த சாதி தாழ்ந்த சாதி கிடையாது, மதம் கிடையாது. மனிதர்கள் தான் பிரித்து பார்த்து பழகி விட்டோம். இரத்தத்திற்கு அந்த பேதம் கிடையாது.
6000 பேருக்கு மேல் அந்த செயலியில் இணைந்து உள்ளனர். பலர் இரத்த தானம் செய்துள்ளனர். இது எல்லாம் மன்ற நிர்வாகிகளுக்கு தான் சேரும். பிடித்து இருந்தால் எடுத்து கொள்ளுங்கள் இல்லை என்றால் விட்டு விடுங்கள்” என்றார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், “1990 -கள்ல எனக்கு ஒரு நடிகர் போட்டியாளரா வந்தாரு. கொஞ்ச நாள்ல அவரு எனக்கு சீரியசான போட்டியாளரா ஆனாரு.
அவரோட வெற்றியால நானும் வேகமா ஓட வேண்டியிருந்தது. அவரைவிட அதிகமா ஜெயிக்கணும்னு நினைச்சேன் எல்லாருக்கும் அப்படி ஒரு போட்டியாளர் தேவை. அந்த போட்டியாளர் பேரு ஜோசப் விஜய்.
உங்ககூட நீங்க போட்டிபோடுங்க. தேவையான விமர்சனமும் தேவையற்ற எதிர்ப்பும்தான் நம்மல ஓட வைக்கும். வாழ்க்கைல முன்னேறனும்னா உங்களுக்கு ஒரு போட்டியாளர் இருக்கணும்.
ஆனா, அந்த போட்டியாளர் நீங்களாதான் இருக்கணும்” என்று விஜய் கூறினார். விழாவில் படத்தின் இயக்குநர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜு, இசையமைப்பாளர் தமன், நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் பங்கேற்றனர்.
இதனிடையே ரஞ்சிதமே பாடலை நடிகர் விஜய் பாட, அவருடன் ரசிகர்களும் கூட பாடினார்கள். வாரிசு இசை வெளியிட்டு விழா மேடையில் இருந்து நடிகர் விஜய் எடுத்து வெளியிட்ட செல்பி வீடியோ டுவிட்டரில் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.