பிரபல தொழிலதிபர் தினேஷ் சாப்டரின் மரணம் படுகொலையா? அல்லது தற்கொலையா என்பது தொடர்பில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் விசாரணைகளில் அது தொடர்பில் கடும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கருதப்படும் தினேஷ் சாப்டரால் அவரது மனைவியின் தாயாரான அவரது மாமியாருக்கு எழுதிய கடிதம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அவர் தமது மாமியாருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இது போன்ற சிறந்த புதல்வியை தனக்கு திருமணம் செய்து வைத்தமைக்காக நன்றி என குறிப்பிட்டி ருந்ததாகவும் அதுபோன்ற உணர்வுபூர்வமான பல விடயங்கள் அந்த கடிதத்தில் காணப்பட்டுள்ளதாகவும் அந்த கடிதம் தினேஷ் சாப்டரால் அவரது மாமியாருக்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் இருந்து தெரிய வருவதாக அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
அதை வேளை சம்பவத்தினத்தன்று தினேஷ் சாப்டர் பயணித்த காரில் வேறு எவரும் பயணம் செய்யவில்லை என்றும் சிசிடிவி கெமரா காட்சிகள் மூலம் அது உறுதிப்படுத்தப்படுவதாகவும் அவ்வாறான தெளிவான சாட்சிகள் உள்ள போதும் தொடர்ச்சியான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் உயர் பொலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தினேஷ் சாப்டர் அவரது மனைவியுடன் இங்கிலாந்துக்கு செல்வதற்கு தயாராகி இருந்த சில மணித்தியங்களுக்கு முன்னரே அவர் மரணமடைந்துள்ளதாகவும் அவரை அவரது நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி மற்றும் பொரளை பொது மயானத்தின் ஊழியர் ஆகியோர் கட்டப்பட்டிருந்த நிலையில் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்திருந்தமை அதற்கு பின்னர் அன்றைய தினமே ஐந்து மணிக்கு அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலை தீவிர சிகிச்சை பிரிவில் மரணமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.