தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது தேய்பிறையாக மாறி அமாவாசையை நோக்கிச் செல்வது போலுள்ளது. இதனால் ஏற்படப் போகும் இருள், கட்சிக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமென இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா தெரிவித்தார்.
‘சூம்’ செயலி ஊடாக (26) நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுக் கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன் போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,
அனந்தி சசிதரன், அருந்தவபாலன் போன்று பலரை தமிழரசுக் கட்சிதான் வெளியேற்றியது. எல்லோரும் பிரிந்து செல்கின்றனர். ஆரம்பத்தில் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்பு 16 பாராளுமன்ற உறுப்பினர்கள். இப்போது 10 பேர் என்று கூட்டமைப்பின் ஆதரவு சுருங்கி வருகிறது.
கூட்டமைப்பு இப்போது தேய்பிறையாக மாறி, அமாவாசையை நோக்கிச் செல்வது போலுள்ளது. இதனால் ஏற்படப்போகும் இருள் கட்சிக்கு மாத்திரமல்ல தமிழ் மக்களுக்கும்தான்.
எமது கட்சி கடந்த பாராளுமன்றத் தேர்தலில் உடுப்பிட்டித் தொகுதியில் மூன்றாம் இடத்தையே பெற்றது. முதலிடத்தில் சிங்கள தேசியக் கட்சி பெற்றது.
நாம் இன்னமும் பிரிந்து – பிளவுபட்டு நிற்போமென்றால் உடுப்பிட்டித் தொகுதியில் கிடைத்த இடம்தான், எல்லாத் தொகுதிகளிலும் கிடைக்கும்.
வீட்டுச்சின்னத்துக்குத்தான் மக்கள் வாக்களிப்பரென்ற நிலைமை இப்போது மாறிவிட்டது. நாம் பிளவுபட்டு நிற்பதால் கூட்டமைப்பு மீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இவ்வளவுக்கும் காரணம் கூட்டமைப்பின் தலைமைதான்.
ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்களின் தான்தோன்றித்தனமான முடிவுகளுக்கு இடம் கொடுத்தமையால்தான், இந்நிலைமை ஏற்பட்டது. எதிர்காலத்தில் கட்சியில் ஒரு நிபுணத்துவக் குழுவை அமைத்து கட்சியை ஜனநாயகப் பண்பாக மாற்றுவோம்.
முதலில் தமிழரசுக் கட்சியைச் சீர்திருத்த ஒரு நிபுணர் குழுவை அமைப்போம். தமிழரசுக் கட்சியை சீராக்கி, பின்னர் ஏனைய கட்சிகளை விமர்சிப்பதே பொருத்தம். தமிழ்த் தேசியக் கட்சிகளை இணைத்தே இனிவரும் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.