வவுனியாவில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்திய அரசாங்கத்தால் நிவாரணத்துக்காக வழங்கப்பட்ட 1,272 கிலோ அரிசி மீட்கப்பட்டுள்ளது. இவை பாவனைக்குதவாத நிலையிலேயே மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவில் உள்ள மதுராநகர் கிராமத்தின் பொது நோக்கு மண்டபத்தில் அரிசி மூடைகள் சில இருப்பதாக கிடைத்த தகவல்களுக்கு அமைவாக மண்டபத்தை அப்பகுதி மக்கள் கடந்த புதன்கிழமை சோதனை செய்த போது இந்திய அரசாங்கத்தால் நிவாரணத்திற்காக வழங்கப்பட்ட அரிசி மூடைகள் ஒரு தொகுதி கண்டு பிடிக்கப்பட்டது.
இந்திய அரசாங்கத்தின் இலச்சினையுடன் கண்டு பிடிக்கப்பட்ட அரிசி மூடைகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் பல மாதங்களாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தமையால் அவை புழு, வண்டு மற்றும் எறும்புகள் நிறைந்து பாவனைக்கு உதவாத நிலையில் மீட்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கு உதவும் நோக்கோடு தமிழக அரசினால் சுமார் 06 மாதங்களுக்கு முன்னர் உலருணவுப்பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. இவை அதிகளவில் வடக்கு மக்களின் பசி போக்கும் திட்டத்தில் கிராம சேகவர் பிரிவு ரீதியில் வழங்கி வைக்கப்பட்டிருந்தது.
ஆசிகுளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மதுராநகர் அண்மையில் வெள்ள அனர்த்தத்திற்கு உள்ளானதால் பெரும் கஸ்டத்திற்கு முகம் கொடுத்து வந்ததாக தெரிவித்த அப்பகுதி மக்கள், அதனை தமக்கு வழங்காது கிராம சேவகரும், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் இணைந்தே இதனை பதுக்கி வைத்ததாகவும் தெரிவித்தனர்.
பதுக்கி வைக்கப்பட்ட அரிசியை பொதுமக்கள் கண்டுபிடித்ததையடுத்து அதனை உடனடியாக மக்களுக்கு வழங்க குடும்ப அட்டைகளுடன் வருமாறு கிராம அபிவிருத்தி சங்கத்தினர் தெரிவித்தாகவும் மக்கள் குற்றம் சாட்டினர்.
இவ் விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளருக்கு கிராம மக்களால அறிவிக்கப்பட்டதையடுத்து வியாழக்கிழமை (29) மாவட்ட செயலக கணக்காய்வு உத்தியோகத்தர்கள், அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள், உதவி பிரதேச செயலாளர் தலைமையில் அங்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
அத்துடன் அரிசி பாவனைக்கேற்றதா என்பதை ஆராய பொது சுகாதார பிரசோதகர்களும் அங்கு பிரசன்னமாகி பரிசோதனைகளை மேற்கொண்டனர். இதன்போது இந்திய உதவித்திட்டத்தில் கிடைத்த 1,272 கிலோ அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்தது.
அரிசியை மேலதிக பரிசோதனைகளுக்காக கொண்டு செல்ல வேண்டியிருப்பதனால் அரிசி முழுவதனையும் பிரதேச செயலகத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமென பொதுமக்களிடம் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்ததுடன் அரிசி மூடைகள் தற்போது பயன்படுத்தும் நிலையில் இல்லையெனவும் தெரிவித்தனர்.
அப்பகுதி மக்களுக்கு கருத்து தெரிவித்த உதவி பிரதேச செயலாளர், கிராம உத்தியோகத்தரின் பக்கம் இதில் பிழைகள் இருந்தாலும் கூட, பொது அமைப்புகளுக்கு தெரியாமல் இருக்கவில்லை எனவும், தனியே அரச உத்தியோகத்தர்கள் வைத்து மட்டும் கிராமத்தை நடத்தவில்லை. அதற்காகவே பொது அமைப்பக்களை தெரிவு செய்கின்றோம். பொது அமைப்புக்களுக்கும் அதற்கான பொறுப்புள்ளது. தங்கள் மக்களின் பிரச்சனையை உரிய தரப்புக்கு எடுத்து கூறியிருக்க வேண்டும். இதற்கான பொறுப்பை பொது அமைப்புக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
புகையிரத நிலையத்திற்கு வந்த பொருட்களை வாகனங்களில் கிராமங்களுக்கு அனுப்பிய போது மழை காரணமாக அரிசி மூடைகள் சில நனைந்தமையால் மேற்படி இடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்ததாக கிராம சேவகரும், கிராம அபிவிருத்தி சங்கத்தினரும் இப்போது தெரியப்படுத்தியுள்ளனர்.
இந்த அரிசி பயன்படுத்தும் நிலையில் உள்ளதா என்பதனை பரிசோதிப்பதற்காகவே வந்திருந்தோம். பொது சுகாதார பரிசோதகர்களின் அறிக்கையின் பிரகாரம் குறித்த அரிசி உடனடியாக பயன்படுத்தக்கூடிய நிலையில் இல்லையென தெரிவித்துள்ளனர்.
இந்த அரிசியை இதே இடத்தில் கழுவி காய வைத்து மீண்டும் வழங்குவதற்கான நிலைக்கு கொண்டு வரலாமாக இருந்தாலும் இவ்விடத்தில் அதற்கான வசதிகள் இல்லை. ஆகவே அதனை எடுத்துச் சென்று பரிசோதித்து பொது சுகாதார பரிசோதகர்களின் அறிக்கை கிடைத்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாமென தெரிவித்தார்.
இதேவேளை இவ்விடயம் தொடர்பாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசனிடம் கேட்டபோது, இவ்விடயம் தொடர்பாக முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது. சம்பந்தப்பட்ட இடத்திற்கு உத்தியோகத்தர்கள் அனுப்பி விடயம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.