கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் வினோதன் மண்டபத்தில் ‘பாலேந்திராவின் அரங்கக் கட்டுரைகள்’ நூல் அறிமுக நிகழ்வு எதிர்வரும் ஜனவரி 07ஆம் திகதி சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.
கடந்த நான்கு தசாப்தங்களாக லண்டனில் வசித்து வரும் பாலேந்திரா, இலங்கையில் 1972 -1982 காலப்பகுதியில் தீவிரமான அரங்க செயற்பாடுகளை மேற்கொண்டு, நூற்றுக்கு மேற்பட்ட ஆற்றுகைகளை இலங்கையின் பல பாகங்களிலும் நிகழ்த்தினார்.
அவரது நாடக இயக்கத்தின் ஒரு பகுதியாக 1979-_1982ஆண்டு காலப்பகுதியில் அவர் எழுதிய கட்டுரைகளே பெரும்பாலும் இந்த நூலில் உள்ளன. நவீன நாடகத் துறையில் தீவிரமாக இயங்கிய காலங்களில் அனுபவச் செறிவுடன் அரங்கு பற்றி அவர் எழுதிய கருத்துக்கள் இன்றும் பொருந்தும் என்று கூறியுள்ளார் பிரபலமான இந்திய நாடக ஆளுமை இந்திரா பார்த்தசாரதி.
இலங்கைப் பத்திரிகைகளில் பிரசுரமாகிய அவரது கட்டுரைகளே முழுமையாக இந்த நூலை அலங்கரிக்கின்றன. ஒரு காலத்தைப் பதிவு செய்யும் ஒரு வரலாற்று ஆவணமாக இந்த நூலைப் பார்க்க முடியும். அரங்கியல் கற்கும் மாணவர்களுக்கு ஒரு அரிய பொக்கிஷம் இந்த நூல். இந்த நூலில் விவாதிக்கப்படும் அரங்கம், திரைப்படம், வானொலி போன்ற விஷயங்கள் மாணவர்களுக்கு பயன்படும் .
ஈழத்து நவீன தமிழ் நாடக உலகில் 50 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக இயங்குபவரும், லண்டனை வசிப்பிடமாகக் கொண்டவருமான முன்னோடி நாடக நெறியாளர் க. பாலேந்திரா எழுதிய இந்த நூல் குமரன் புத்தக இல்லம் வெளியீடாக இலங்கையில் வெளியாகிறது. நான்கு உபதலைப்புகளில் கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
மேடைப் பிரச்சினைகள், நாடக சர்ச்சை, பாலேந்திரா தமிழுக்கு அறிமுகப்படுத்திய பிறமொழி நாடகாசிரியர்கள், புலம்பெயர் நாடக அனுபவங்கள் ஆகிய பிரிவுகளில் கட்டுரைகள் உள்ளன. நவீன நாடகம் தொடர்பான பல அம்சங்கள் இந்த நூலில் விவாதிக்கப்படுகின்றன.
பிரபலமான மூத்த இந்திய நாடக ஆளுமை இந்திரா பார்த்தசாரதி அவர்களது அணிந்துரையுடன் இந்த நூல் வெளிவருவது சிறப்பாகும்.
நூலாசிரியர் பாலேந்நிரா பற்றி நூலகவியலாளர் என். செல்வராஜா எழுதிய குறிப்பு மற்றும் நாடக நெறியாளர் பற்றிய பல தகவல்களை இந்நூல் அடக்கியுள்ளது.