ஹரியானா மாநிலம் குருஷேத் ராவில் நேற்று தேசிய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்ட ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது.
சமூகத்தில் பரப்பப்படும் வெறுப்புணர்வு, அச்சம் மற்றும் வேலை வாய்ப்பின்மை, பணவீக்கம் ஆகியவற்றுக்கு எதிராக நான் தேசிய ஒற்றுமை யாத்திரை மேற்கொள்கிறேன். நாட்டின் உண்மையான குரலை மக்கள் கேட்க வைப்பதுதான் இந்த யாத்திரையின் நோக்கம். இந்த யாத்திரையில் நாட்டு மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை நேரடியாக கேட்க முடிகிறது.
நாங்கள் யாத்திரை செல்ல, செல்ல, வரவேற்பும் அதிகரிக்கிறது. இந்தியாவின் குரல் நசுக்கப்படுகிறது. நாடு பிரிக்கப்படுகிறது என்ற அச்சம் மக்களிடையே பரவுகிறது. ஒரு ஜாதிக்கு எதிராக மற்றொன்று, ஒரு மதத்துக்கு எதிராக மற்றொரு மதம் என பிரிவினை ஏற்படுத்தப்படுகிறது. அதற்கு எதிராகத்தான் இந்த யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது.
நாம் நமது நாட்டை, மக்களை, விவசாயிகளை, ஏழைகளை நேசிக்கிறோம். அவர்களுடன் இணைந்து செல்ல விரும்புகிறோம். நாட்டின் குரலை மக்கள் கேட்க வேண்டும் என்பதுதான் இந்த யாத்திரையின் நோக்கம். நாட்டில் பொருளாதார ரீதியாக சமத்துவம் இன்மை நிலவுகிறது. ஊடகம் மற்றும் இதர நிறுவனங்கள் சிலரது கட்டுப்பாட்டில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
கடுமையான பனிப்பொழிவு எச்சரிக்கைக்கு மத்தியில் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை பெண் சக்தி தினமாக இன்று (திங்கள்கிழமை) ஹரியானாவில் இருந்து தொடங்கியது.
காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை மீண்டும் ஹரியாணா மாநிலத்தை அடைந்துள்ளது. அங்கு பல்வேறு மாவட்டங்கள் வழியாக நடைபயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குருஷேத்திரத்தை அடைந்தார்.
இந்தநிலையில் இன்றைய யாத்திரை பெண்கள் பங்கேற்கும் பெண்கள் சக்தி தினமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்றைய யாத்திரை ஹரியாணாவிலுள்ள கான்பூரின் கோலியன் பகுதியில் இருந்து இன்று காலை மீண்டும் தொடங்கியது.
வடமாநிலங்களில் கடும் பனிபொழிவு நிலவி வருகிறது. இந்த நிலையில் பனிபொழிவு காரணமாக ஹரியாணா மாநிலத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருந்த போதிலும் காலையில் வாகன விளக்குகள் ஒளி பனிமூட்டத்திற்கு இடையில் இந்திய ஒற்றுமை யாத்திரை தொங்கியது. ராகுல் காந்தியுடன் பெண்கள் பலர் யாத்திரையில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தொடர் பதிவில், “வெறுப்பு இருளைக் கிழித்து, அன்பின் ஒளி இந்தியாவை ஒளிரச்செய்கிறது. ஹரியாணா மக்களுக்கான அன்பின் செய்தியைச் சுமந்து கொண்டு இந்திய ஒற்றுமை யாத்திரை தன் முதல் ஒளியுடன் துவங்குகிறது.
47 கி.மீ. பெண் சக்தி நாட்டை முன்னேற்றம் அடையச் செய்யும். ராகுல் இந்திய ஒற்றுமை யாத்திரையில் இருக்கிறார். ராகுல் காந்தியின் வேகத்தில் பெண்கள் முன்னேற்றப்பாதையில் பயணிக்கின்றனர். இன்றைய இந்திய ஒற்றுமை யாத்திரை பெண் சக்திகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மூடுபனி விலகுகிறது.. இந்தியா இணைகிறது. வெறுப்பின் மூடுபனியை விலக்கிக்கொண்டு இந்திய ஒற்றுமை யாத்திரை முன்னேறி வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி ராகுல் காந்தி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்.
இந்த யாத்திரை தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியாணா டெல்லி, உத்தரபிரதேசம் வழியாக தற்போது மீண்டும் ஹரியானாவிற்குள் நடைபெற்று வருகிறது. ஜனவரி 26 ஆம் தேதி காஷ்மீரில் யாத்திரை நிறைவடைகிறது.