ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது.
தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்றது.
மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், பிரகாஷ் ராஜ், சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வசூலை குவித்தது. இதனிடையே, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.
ஆஸ்கருக்கு அடுத்தப்படியாக திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும் கோல்டன் குளோப் விருதில் ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ வென்றுள்ளது.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த கோல்டன் குளோப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் விருதை பெற்றுக்கொண்டனர்.
நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்த எம்.எம். கீரவாணி நிகழ்ச்சி மேடையில் ஏறி கோல்டன் குளோப் விருதை பெற்றுக்கொண்டார்.
கோல்டன் குளோப் விருதை வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கோல்டன் குளோப் விருது வென்ற ஆர்ஆர்ஆர் படக்குழுவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், பாராட்டுக்கள். விருதுக்கு சிறப்பாக செய்தீர்கள் என பதிவிட்டுள்ளார்.