தமிழ் திரையுலகை பின்னோக்கி பார்த்தால் நகைச்சுவையால் ரசிகர்களின் கவலையை மறைக்கச் செய்த காமெடி நடிகர்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும். சிரிக்க வைத்தால் மட்டும் போதும் என்றில்லாமல், நகைச்சுவை வசனம் மூலம் சிந்திக்க வைத்த கலைஞர்களும் உண்டு.
என்.எஸ்.கிருஷ்ணன், டி. ஏ.மதுரம், தங்கவேலு, வி.கே.ராமசாமி, மனோரமா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, விவேக், வடிவேல், சந்தானம் என்று பலரும் பல்வேறு காலங்களில் தங்கள் பங்கை வழங்கி ரசிகர் களை சிரிக்கவும், சிந்திக்க வும் வைத்தனர். ஆனால் சமீப காலமாக தமிழ் சினிமாவில் காமெடி படங்கள் வெளிவருவதும், காமெடி நடிகர்களின் பங்களிப்பும் வெகுவாக குறைந்துள்ளது.
பத்து படங்கள் வெளிவந்தால் அதில் பாதி படங்கள் பேய் படங்களாகவும், சஸ்பென்ஸ் கதைகளாகவும் உள்ளன. கதாநாயகர்களும் துப்பாக்கி, கத்திச் சண்டை போன்ற அதிரடி படங்களுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள். காமெடி படங்கள் பண்ண வேண்டும் என்கின்ற ஆர்வம் கதாநாயகர்கள் மத்தியில் குறைந்து வருகிறது. கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, விவேக், வடிவேலு காலகட்டங்களில் தனியாக `காமெடி டிராக்’ படங்களில் இடம் பெறுவதுண்டு. இயக்குனர்களும் காமெடி நடிகர்களை மனதில் வைத்து கதை எழுதியது உண்டு.
அதன் பிறகு நிலைமை மாறி விட்டது. வடிவேல் கதாநாயகனாகி விட்டார். அவருக்கு பிறகு நகைச்சுவை நடிகராக கொடிகட்டிப் பறந்த சந்தானமும் இப்போது கதாநாயகன். தொடர்ந்து வந்த யோகிபாபுவும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர்கள் காமெடி செய்வதை விட கதாநாயகானாக நடிக்கவே ஆர்வம் காட்டுகின்றனர். இதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
காமெடியனாக நடிக்கும் போது சில நாட்கள்தான் படப்பிடிப்பு இருக்கும். சம்பளமும் குறைவாக கிடைக்கும். ஹீரோவான பிறகு பெரிய அளவில் புகழும், கோடிக்கணக்கில் சம்பளமும் கிடைக்கின்றன.
சண்டைக்காட்சி, டூயட், கதாநாயகியுடன் காதல் பண்ணும் காட்சி என்று அவர்களுக்கான முக்கியத்துவம் கதையில் இடம்பெறுகிறது. எனவே சில படங்களில் நடித்ததும் காமெடியர்கள் கதாநாயகர்கள் ஆகி விடு வதால் தமிழ் பட உலகில் காமெடி பஞ்சம் தலை தூக்கி உள்ளது. மெயின் காமெடி நடிகர்களுக்கு துணையாக வந்த சிரிப்பு நடிகர்களும் வாய்ப்பு இல்லாமல் வீட்டில் முடங்கி உள்ளனர்.
இயக்குனர்களும் காமெடி காட்சிகள் வைப்பதை மறந்து வருகிறார்கள். அப்படியே சில காட்சிகள் இருந்தாலும் சிரிப்பு வருவது இல்லை இந்த நிலை மாறி மீண்டும் திரைப்படங்கள் சிரிக்க வைக்குமா? என்பது ரசிகர்கள் எதிர்பார்ப்பு.
கதை எழுதும் கதாசிரியர்கள் அல்லது இயக்குனர்கள் காமெடிக்காகவும் காமெடி நடிகர்களுக்காகவும் யோசித்து கதை எழுதவேண்டும் என்பதும் நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகனாக நடித்தாலும் மற்ற நடிகர்கள் படங்களில் காமெடியர்களாக நடிக்க முன்வரவேண்டும் என்பதும் ரசிகர்கள் விருப்பமாக உள்ளது.
மருந்து, மாத்திரைகள், மருத்துவமனை, மன அழுத்தம். வேலைப்பளு என பல்வேறு நெருக்கடிகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களுக்கு, காமெடி என்பது எப்போதும் ஓர் அருமருந்து என்பதை மறுப்பதற்கு இல்லை.