‘சினிமாவின் கடவுள்’ ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கை சந்தித்தேன் என ராஜமவுலி நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியான ‘பாகுபலி’, ஆர் ஆர் ஆர் உள்ளிட்ட பிரமாண்ட படங்களை இயக்கிய ராஜமவுலி அமெரிக்கா சென்றுள்ளார்.
அவரது ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு உயரிய கோல்டன் குளோப் விருது கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் நடந்த விருது வழங்கும் விழாவில் நடிகர் ராம்சரண், இசையமைப்பாளர் கீரவாணி ஆகியோருடன் ராஜமவுலி கலந்து கொண்டார்.
பின்னர் அங்கு பிரத்யேகமாக நடந்த விருந்து நிகழ்ச்சியிலும் ராஜமவுலி பங்கேற்றார். அப்போது ஜுராசிக் பார்க், இண்டியானா ஜோன்ஸ், ஜாஸ் உள்ளிட்ட பல பிரமாண்ட படங்களை இயக்கிய புகழ்பெற்ற ஹாலிவுட் டைரக்டர் ஸ்டீவன் ஸ்பீல் பெர்க்கை ராஜமவுலி சந்தித்தார்.
அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்குடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வலைத்தளத்தில் வெளியிட்டு ”சினிமாவின் கடவுளை சந்தித்தேன். அப்போது அவரது திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றேன்.
நாட்டு நாட்டு பாடல் பிடிக்கும் என்று அவர் என்னிடம் கூறியதை நம்பவே முடியவில்லை” என்ற பதிவையும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.
இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது. ராஜமவுலியின் ஆர் ஆர் ஆர் படம் ஆஸ்கார் பரிந்துரை தகுதி பட்டியலில் இடம்பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.