உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புதொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் கூடிய 03 பக்கங்களடங்கிய அறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் வழக்கு
தொடர்பான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அதிலுள்ள மேலும் பல விடயங்கள் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் போன்று தம்மைப் பாதித்த எந்தவொரு நிகழ்வும் தமது வாழ்வில் இதுவரை இடம்பெறவில்லையெனவும் அதனால் ஏற்பட்ட சமூக, பொருளாதார, அரசியல் விளைவுகளால் மேலும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேனவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பினூடாக பாதுகாப்பு அமைச்சர், நிறைவேற்று ஜனாதிபதியின் பொறுப்புகளை மென்மேலும் தெளிவுபடுத்தியுள்ளமையை பாராட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த தீர்ப்பின் ஊடாக, எதிர்கால அமைச்சர்களின், ஜனாதிபதிகளின் செயற்பாடுகள், நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் சிறந்தநிலை கட்டியெழுப்பப்படும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை என மைத்திரிபால சிறிசேன தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.