நேபாள தலைநகர் காட்மண்டுவில் இருந்து சுற்றுலா தலமான பொக்காராவுக்கு நேற்று முன்தினம் காலை 10.33 மணிக்கு எட்டி ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 68 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 72 பேர் பயணம் செய்தனர்.
அந்த விமானம் காலை 11 மணிக்கு பொக்காரா விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றது. விமான நிலையத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விமானத்தில் திடீரென்று தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது பழைய விமான நிலையத்துக்கும், புதிய விமான நிலையத்துக்கும் இடையே உள்ள சேட்டி நதிக்கரையில் விமானம் விழுந்து நொறுங்கியது.
அந்த நேரத்தில் மோசமான வானிலையும் நிலவியது. இதற்கிடையே தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் திடீரென்று தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் 5 இந்தியர்கள் உள்பட 72 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இந்த விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விபத்து நடைபெற்ற இடத்தில் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டுள்ள நிலையில், விபத்துக்கான காரணம் என்பது குறித்த விசாரணை சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில், விபத்து ஏற்படும் முன்னர் விமானத்தில் பயணித்த இந்தியப் பயணி ஒருவர் விமானம் தரையிறங்கும் காட்சியை லைவ் வீடியோவாக முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது தற்போது வைரலாகியுள்ளது.
அந்த இளைஞர் வீடியோவின் துவக்கத்தில் மிக சந்தோஷமாக சிரித்தபடி கண்ணாடி வழியே பார்த்துக்கொண்டு வரும்போது திடீரென விமானம் நிலை தடுமாறியதில் செல்போன் கீழே விழுகிறது. அதனைத் தொடர்ந்து தீப்பற்றி எரியும் நிலையில் அங்கு பயணிகளின் அலறல் சத்தம் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது.