இந்திரா காந்தியின் வாழ்க்கையை மையமாக கொண்டு, கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகிவரும் ‘எமர்ஜென்சி’ படத்தை, அவரே இயங்கியும், தயாரித்தும் வருகிறார்.
இது குறித்து பேசிய அவர், இப்படம் எளிதாக முடிந்துவிடவில்லை எனவும், பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில்தான் இப்படம் உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், இப்படத்தை தனது வாழ்வின் பெருமைக்குரிய தருணமாக கருதுவதாகவும் குறிப்பிட்டார்.
——–
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜெர்மி ரென்னர். இவர் ‘அவெஞ்சர்ஸ்’ படம் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற நடிகராக உயர்ந்தார். அமெரிக்காவில் நெவாடா மாகாணத்தில் உள்ள மவுண்ட் ரோஸ் – ஸ்கி தஹோ பகுதியில் வசித்து வருகிறார்.
புத்தாண்டு அன்று ஜெர்மி ரென்னர் காரில் சென்றபோது பனிப்புயலில் கார் சிக்கி கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஜெர்மி ரென்னர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது முகத்தில் காயம் ஏற்பட்டு மூக்கு வழியாக ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. ஜெர்மி ரென்னர் ஆபத்தான நிலையில் இருந்தாலும் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இந்த நிலையில் ஜெர்மி ரென்னர் தற்போது படுத்த படுக்கையில் இருந்து சிகிச்சை பெறும் புகைப்படத்தை வலைத்தளத்தில் பகிர்ந்து வெளியிட்டுள்ள பதிவில், “அதிகாலை உடற்பயிற்சி, புத்தாண்டு தீர்மானங்கள் எல்லாம் இந்த புது வருடத்தில் மாறிவிட்டன.
விபத்து எனது குடும்பத்தினரை சோகத்தில் தள்ளியது. அதில் இருந்து மீள்கிறேன். நான் நலம்பெற வாழ்த்தி குறுந்தகவல் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. விபத்தில் உடைந்து போன எனது 30-க்கும் மேற்பட்ட எலும்புகள் சரியாகி வலுவடையும்.
உங்கள் அனைவருக்கும் அன்பும், ஆசிகளும்” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
——–
நடிகர் ஆர்.ஜே. பாலாஜி தற்போது இயக்குனர் ஜியென் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் திரில்லர் படமொன்றில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைக்க, எஸ் யுவா ஒளிப்பதிவு செய்கிறார்.
‘ரன் பேபி ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் ஆர்.ஜே. பாலாஜி கூறியதாவது,
“இப்போதெல்லாம், படத்தின் வசூல் பற்றி இளைஞர்கள் அதிகமாகக் கவலைப்படுகிறார்கள். அமெரிக்காவில் எவ்வளவு வசூல், ஐரோப்பாவில் இவ்வளவு வசூல் என்று அவர்களின் நேரமும் ஆற்றலும் வீணாகிறது. கோடிகள் செலவழித்து படம் தயாரிப்பவர்கள் இதுபற்றி கவலைப்பட்டுக் கொள்வார்கள்.
இளம்தலைமுறையினர் கவலைப்படுவதில் தனிப்பட்ட முறையில் எனக்கு உடன்பாடு இல்லை” என்று கூறினார்.