ஊடக அறிக்கை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனக் கூற முடியாது என்று வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
தனது அலுவலகத்தில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப் பின்போதே அவர் மேற்கண்ட வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
“கடந்த சில நாட்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழரசு கட்சி, அதன் செயற்பாடுகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் குறித்து பல செய்திகள் வெளிவந்துள்ளன. அது பற்றி விமர்சனம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. ஆனால் இருந்தாலும் கூட ரெலோவின் பேச்சாளர் சம்பந்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பதவியில் இல்லை. அல்லது அவரது பதவி செயலற்றுப் போய்விட்டது. அவருடைய தலைவர் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சி கூட்டமைப்பிலிருந்து வெளியேறவில்லை. ஆனால் இரண்டு கட்சிகளாலும் காலம் காலமாக பல காலமாகவே உச்சரிக்கப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விடயம் – அந்த விடயத்தை அவர்கள் நிறைவேற்றி இருக்கின்றார்கள். அது அவர்களின் உரிமை. பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்ததும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் போட்டியிட்ட மூன்று கட்சி களும் அவற்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாகச் சேர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு சம்பந்தனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவராக தெரிவு செய்தனர். அது முன்பும் அவ்வாறே நடந்தது. ஆகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் தெரிவு என்பது இதுவரையில் பாராளுமன்றக் குழுவாகவே இருந்திருக்கின்றது.
பாராளுமன்றக் குழு தெரிவு செய்த சம்பந்தன் இன்னும் அந்தப் பதவியில் தான் இருக்கின்றார். ஆகவே அவரை நீக்குவதோ அல்லது அந்தப் பதவி வறிதாக்குவதோ வெறுமனே ஓர் ஊடக அறிக்கை மூலம் சொல்ல முடியாது. முறைப்படியாக பாராளுமன்றக் குழு கூடி விரும்பினால் அவரை நீக்கலாம் அல்லது அவர் விரும்பினால் விலகலாமே தவிர பதவி வறிதாக்கல், செயலற்றுப் போதல் என்று எதுவும் இல்லை. நீண்ட வரலாற்றைக் கொண்ட ஒரு தலைவரை இவ்வாறு அவமதிக்கின்ற ஒரு கூற்றை என்னைப் பொறுத்தவரை தமிழரசுக் கட்சி சார்ந்தது மட்டுமல்லாது பொதுவாகவே ஒரு மனிதனின் மதிப்பு சார்ந்த விடயத்தில் அதை ஆட்சேபிக்கின்றேன். அது தவறு. சம்பந்தன் இன்னும் பாராளுமன்றக் குழுவின் தலைவராகவும் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்படுகின்றார் என்பதே உண்மை” என்றார்.