ஓய்வு பெற்ற மேஜரும் சமூக செயற்பாட்டாளருமான அஜித் பிரசன்னவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இன்று (24) குறித்த வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்ற நீதிபதிகளான ப்ரீத்தி பத்மன் சூரசேன, எஸ். துரைராஜா, எஸ். துரைராஜா ஆகிய நீதிபதிகள் குழாம் அறிவித்தனர்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குறித்த தண்டனையை விதித்த நீதிமன்றம், அவருக்கு ரூ. 3 இலட்சம் அபராதத்தையும் விதித்துள்ளது.
குறித்த அபராதத்தை செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் 6 மாத சிறைத் தண்டனை விதிக்கவும் நீதிமன்றம் இதன்போது உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
சாட்சிகளை மிரட்டியதில் அவர் ஈடுபட்டதாகக் கூறப்படும் விடயம் தொடர்பில் அஜித் பிரசன்ன கடந்த 2021 ஜனவரியில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தால் தலா ரூ. 500,000 கொண்ட இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படை அதிகாரிகளுக்கு எதிரான வழக்கில் அஜித் பிரசன்ன மற்றும் 2 கடற்படை புலனாய்வு அதிகாரிகள், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி சாட்சிகளை மிரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.