அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டுவருகிறது என்றும் அக்குழுமத்துக்கு மிக அதிக அளவில் கடன் உள்ளது என்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனம் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நேற்று முன்தினம் அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு ரூ.46,000 கோடி சரிந்தது.
இந்நிலையில், ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை ஆதாரமற்றது என்றும் தீங்கிழைக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளது என்றும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து அதானி குழுமம் மேலும்கூறுகையில், “அதானி குழுமத்தின் மதிப்பை குலைக்கும் உள்நோக்கத்தில் ஆதாரமற்ற அறிக்கையை ஹிண்டன்பர்க் வெளியிட்டுள்ளது.
எங்கள் சரிவிலிருந்து ஹிண்டன்பர்க் ஆதாயமடைய முயற்சிக்கிறது. இந்தத் தவறான அறிக்கையால், அதானி குழுமத்தின் பங்குதாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியப் பங்குச் சந்தையிலும் இந்த அறிக்கைபாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது. ஹிண்டன்பர்க் நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது.
அதானி நிறுவனங்களின் பங்கு மதிப்பு கடந்த 2 ஆண்டுகளில் 819 சதவீதம் அதிகரித்துள்ளது. 120 பில்லியன் டாலர் (ரூ.9.84 லட்சம் கோடி) சொத்து மதிப்பைக் கொண்டு உலக பில்லியனர்கள் பட்டியலில் அதானி 3-ம் இடத்தில் உள்ளார். இந்தச் சூழலில் தற்போது வெளிவந்திருக்கும் ஹிண்டன்பர்க் அறிக்கை அதானி குழுமத்தின் வளர்ச்சியை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
“தங்கள் நிறுவனங்களின் பங்குமதிப்பு உயர்வைக் காட்டி அதானிகுழும நிறுவனங்கள் மிக அதிகஅளவில் கடன் பெற்றுள்ளன. மேலும், பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளன. அதானிகுடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் போலி நிறுவனங்களைத் தொடங்கி வரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்” என்று ஹிண்டன்பர்க் ரிசர்ச் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.