மிஸ்ஸியம்மா, தெனாலி ராமன், தூங்காதே தம்பி தூங்காதே உள்ளிட்ட பல படங்களில் நடித்த பழம்பெரும் நடிகை ஜமுனா வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 86. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஜமுனா.
1953ம் ஆண்டு தெலுங்கில் வெளியான புட்டிலு படத்தின் மூலம் 16 வயதில் நடிக்கத் தொடங்கியவர் நடிகை ஜமுனா. நடிகை, இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பன்முகத் தன்மை கொண்டு விளங்கிய நடிகை ஜமுனாவின் மறைவு திரையுலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகை சாவித்திரி அழைத்ததால் சினிமாவுக்கு வந்தவர் நடிகை ஜமுனா. தெலுங்கில் வெளியான புட்டிலு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் 1954ம் ஆண்டு ‘பணம் படுத்தும் பாடு’ படத்தின் மூலம் அறிமுகமானார். வயது மூப்பு மற்றும் உடல்நலக் குறைவால் கடந்த சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த நடிகை ஜமுனா நேற்று அவரது இல்லத்தில் காலமானார்.
தெலுங்கில் நடிகையாக 16 வயதில் நடிக்கத் தொடங்கிய ஜமூனா தமிழ், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் நடித்து அசத்தியவர். தமிழில் கடைசியாக கமல்ஹாசனின் ‘தூங்காதே தம்பி தூங்காதே’ படத்தில் நடித்திருந்தார் ஜமுனா.
தெலுங்கில் ரங்காராவ், நாகேஸ்வரராவ் என முன்னணி நடிகர்களுடன் நடித்த ஜமுனா தமிழில் சிவாஜி கணேசனுடன் ‘தங்கமலை ரகசியம்’ எம்ஜிஆர் உடன் ‘தாய் மகளுக்கு கட்டிய தாலி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ‘குழந்தையும் தெய்வமும்’ உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தன.