இலங்கை வருகிறார் பான் கீ மூன்

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதி இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் முன்னாள் அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தியோகபூர்வ அழைப்பை ஏற்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளும் பான் கீ மூன் இந்த விஜயத்தின் போது இலங்கையின் நிலையான அபிவிருத்தி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான உடன்படிக்கைகள் சிலவற்றிலும் கைச்சாத்திடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பெப்ரவரி 7ஆம் திகதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் தற்போது தென் கொரியாவின் அரச நிறுவனமான உலக பசுமை மேம்பாட்டு நிறுவனத்தின் (GGGI) தலைவராக கடமையாற்றி வருகின்றார். அந்த வகையில் மேற்படி நிறுவனத்தின் தலைவராகவே அவர் இலங்கையில் உடன்படிக்கைகள் சிலவற்றில் கைசாத்திடவுள்ளார்.

அவர் நாட்டில் தங்கியுள்ள சந்தர்ப்பத்தில்

இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பல்கலைக்கழகம் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதற்கான செயற்திட்டம் கொரியாவுடன் இணைந்து இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளரான அவர், இதற்கு முன்னர் பல தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts