வெளிநாடுகளில் இந்தியர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினர் மீது தாக்குதல் நடத்தப்படுவது கடந்த ஆண்டில் அதிகரித்து இருந்தது. இந்நிலையில், சமீப காலங்களாக இந்து மத ஸ்தலங்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. புது வருடம் தொடங்கியது முதல், ஆஸ்திரேலியா நாட்டில் மதவெறி சார்ந்த தாக்குதல்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இதன்படி, மெல்போர்ன் நகரில் மில் பார்க் என்ற இடத்தில் சுவாமி நாராயண் இந்து கோவில் மீது கடந்த 12-ந்தேதி காலிஸ்தான் ஆதரவாளர்கள் திடீர் தாக்குதல் நடத்தி, இந்தியாவுக்கு எதிரான வாசகங்களையும் அதில் எழுதி இருந்தது பரபரப்பு ஏற்படுத்தியது. கோவிலின் சுவர் மீது இந்தியா ஒழிக என பொருள்படும் வகையிலான இந்துஸ்தான் முர்தாபாத் என வர்ணம் பூசி உள்ளனர்.
இந்துக்கள் மீது வெறுப்பை உமிழும் இந்த செயல்களால், பல்வேறு இந்தியர்கள் மற்றும் சீக்கிய தலைவர்களும் வருத்தம் அடைந்துள்ளனர். இதற்கு கேரள இந்து சமூகமும் கண்டனம் தெரிவித்தது. பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோவில் சுவர்களில் வாசகங்கள் எழுதப்பட்டு இருந்தன. இதனை தொடர்ந்து, கடந்த 16-ந்தேதி மற்றொரு இந்து கோவில் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் தெரிய வந்தது.
கேரம் டவுன்ஸ் நகரில் உள்ள சிவ விஷ்ணு கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் அதில் எழுதப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஆல்பர்ட் பூங்கா பகுதியில் உள்ள இந்து கோவிலான இஸ்கான் கோவில் மீது கடந்த 23-ந்தேதி இந்தியாவுக்கு எதிரான மற்றும் காலிஸ்தான் ஆதரவு வாசகங்கள் எழுதப்பட்டு, அவமதிப்பு செய்யப்பட்டு உள்ளது.
இதனால், ஆஸ்திரேலியாவில் ஒரே மாதத்தில் 3-வது முறையாக இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது. இந்நிலையில், கனடாவின் பிராம்ப்டன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற இந்து கோவிலான கவுரி சங்கர் கோவிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டு உள்ளன. இதற்கு டொரண்டோ நகரில் அமைந்துள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி இன்று வெளியிட்ட அறிவிப்பில், வெறுக்கத்தக்க வகையிலான இந்த செயல்கள், கனடாவில் வசிக்கும் இந்து சமூகத்தினரின் உணர்வுகளை வெகுவாக புண்படுத்தி உள்ளன. இந்த விவகாரம் பற்றி கனடா நாட்டு அதிகாரிகளிடம் எடுத்து கூறியுள்ளோம்.
எங்களது வருத்தங்களையும் தெரிவித்து கொண்டுள்ளோம் என்று அறிக்கையில் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலில் காலிஸ்தான் இயக்கம் ஈடுபட்டு இருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி கனடா நாட்டு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
பிராம்ப்டன் நகர மேயர் பேட்ரிக் பிரவுன், கவுரி சங்கர் இந்து கோவில் அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். எங்களது நகரிலோ அல்லது நாட்டிலோ வெறுப்புணர்வை தூண்டும் வகையிலான தாக்குதலுக்கு இடம் கிடையாது.
இதுபற்றி போலீசாரிடம் விசாரிக்க கூறியுள்ளேன். ஒவ்வொருவரும் அவர்களுடைய வழிபாட்டு தலத்தில் பாதுகாப்புடனான உணர்வுடன் இருக்க செய்வோம் என டுவிட்டரில் அவர் தெரிவித்து உள்ளார்.