தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்திய அளவில் கோடிக் கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘பீஸ்ட்’ படம் விமர்சன ரீதியாக பெரும் தோல்வியைச் சந்தித்தாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை கொடுத்தது. இதைத்தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் ‘வாரிசு’ படத்தில் நடித்தார்.
ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படம் கடந்த 11-ம் தேதி வெளியானது. அப்போது நடிகர் அஜித் நடித்த துணிவு படமும் வெளியானது. இதனால் துணிவா? வாரிசா? என்ற போட்டி நிலவி வந்த நிலையில் துணிவுடன் வாரிசு வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இதை அடுத்து நடிகர் விஜயின் 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது.
இந்த கூட்டணியில் ஏற்கனவே ‘மாஸ்டர்’ படம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வந்து கொண்டு இருக்கிறது. படத்திற்கு அனிருத் இசை. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ எஸ்.எஸ்.லலித் குமார் தயாரிக்கவுள்ளார். அதேபோல் நடிகர் விஜயுடன் திரிஷா, பிரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பெரிய பட்டாளமே நடிக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் தளபதி 67 பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் இந்த படக்குழு முதற்கட்ட படப்பிடிப்புக்காகக் காஷ்மீர் சென்றுள்ளனர். நடிகர் விஜயின் தளபதி 67 படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து வந்த நிலையில் இன்று படத்தின் பெயருக்கான பிரோமோ வீடியோயோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இதில் தளபதி 67 படத்திற்கு ‘லியோ’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘கைதி’,’மாஸ்டர்’, ‘விக்ரம்’ இந்த மூன்று படங்களும் போதைப் பொருட்கள் மற்றும் கேங்ஸ்டர் கலாச்சாரத்தை மையாக வைத்து வெற்றி படங்களை கொடுத்தார் இயக்குநர் லோக்கேஷ் கனகராஜ்.
இதில் ‘கைதி: மற்றும் ‘விக்ரம்’ படம் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை. இதனால் மார்வெல் படங்களைப் போன்று லோகேஷ் சினிமாட்டிக் யுனிவெர்ஸ் என அவரது படங்களை ரசிகர்கள் கொண்டாடினர். இதனால் இவரது அடுத்த படமும் இதன் தொடர்ச்சியாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனை உறுதி செய்யும் வகையிலேயே நடிகர் விஜயின் லியோ படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகியுள்ளது.
இதில் நடிகர் விஜய் சாக்லேட் தயாரிப்பதுபோன்று, கோல்டு காயின் கடத்துவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இதனால் போதைப் பொருட்களுக்கு அடுத்துத் தங்கக் கடத்தல்தான் இந்தப் படத்தின் மையக் கதையாக இருக்கும் என்பது தெரியவருகிறது. இதையடுத்து நடிகர் விஜயின் ‘லியோ’ படத்தின் டைட்டில் வீடியோ சமூகவலைதங்களில் அவரது ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.
இந்தியாவிலேயே 7 மணி நேரத்திற்குள் அதிகம் லைக்குகளை அள்ளிய இன்ட்ரோ பிரோமோ வீடியோ லியோ வீடியோ மாறி உள்ளது. 7 மணி நேரத்திற்குள் 11 லடசம் லைக்குகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. ஷாருக்கானின் ஜவான் மற்றும் விக்ரம் இன்ட்ரோ பிரோமோ ரெக்கார்டை இந்த படம் முந்தியுள்ளது. பிரமோ வீடியோவில் ந்காஷ்மீரில் படு கூலாக சாக்லேட் தயாரித்துக் கொண்டிருக்கிறார் விஜய்.
மற்றொரு பக்கம் இரும்பு பட்டறையில் வாள் ஒன்றை செதுக்கிக் கொண்டிருக்கிறார் விஜய். பின்னணியில் சிலுவை படம் இருக்கிறது. ஒருவேளை படத்தில் இரண்டு விஜய்யா என்ற கேள்வியும் எழுகிறது. இந்த நிலையில் முகமூடி அணிந்த கும்பல் ஒன்று அவரைத் தேடி வருவதுபோல காட்டப்படுகிறது. பின்னர் அந்த கும்பல் நெருங்கி வந்ததும் சாக்லெட்டில் முக்கி அந்த வாளை எடுத்து பிளடி ஸ்வீட் என்கிறார்.
பொதுவாக தமிழ் படங்கள் முடிவடையும் தருவாயில் தான் படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும். ஆனால் லியோ படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டில் படம் துவங்கும்போதே ரிலீஸ் தேதி முடிவு செய்யப்படும். சில பாலிவுட் படங்களும் இந்த நடைமுறையைக் கடைபிடிக்கின்றன. நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படமும் தீபாவளிக்கு வெளியாகவிருப்பதாக கூறப்படும் நிலையில் லியோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.