75ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, ‘லங்காரலங்கா’ எனும் விசேட கலாசார நிகழ்வு கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
இங்கு நடனம், சங்கீதம், இசையென 18 விசேட கலாசார நிகழ்வுகளின் தொகுப்பைக் கண்டுகளிக்க கூடியதாக இருந்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
நேற்றுமுன்தினம் (03) இரவு இடம்பெற்ற ‘லங்காரலங்கா’ கலாசார நிகழ்வில் 10 அரச நடனக் குழுக்களும் 08 தனியார் நடனக் குழுக்களும் பங்குபற்றின.
காயா ரம்யா அல்விஸ்ஸின் எழுத்தாக்கத்தில் ஜானக்க பொன்சேக்காவின் இசையில் பேராசிரியர் கருணாரத்ன பண்டார மற்றும் கலாநிதி.ரவிபந்து வித்யாபதி ஆகியோரின் நடன ஒழுங்கமைப்பின் கீழ் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
விடுதலை. சுதந்திரம். உண்மையில் விடுதலை என்றால் என்ன? நாம் எவ்வாறு உண்மையாகவே சுதந்திரத்தைப் பெறுவது? சுதந்திரத்தைப் பெறுவதால் மட்டுமல்ல அதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலமே எம்மால் சுதந்திரத்தை அனுபவிக்க முடியுமென அமெரிக்க எழுத்தாளர் வில்லியம் போக்னர் கூறுகின்றார்.
சுதந்திரம் எனும் சிறந்த கருத்தியலை அனுபவிப்பதற்கு அவசியமான நல்ல பழக்கங்கள் மற்றும் பயிற்சிகள் எம்மிடம் உள்ளனவா? ஏகாதிபத்திய யுகம் முடிவுக்கு வந்துள்ள போதும், சுதந்திரத்தை அனுபவிக்கும் பழக்கத்தை நாம் எம்மில் மேம்படுத்திக் கொண்டுள்ளோமா? சுதந்திரமடைந்து எழுபத்தைந்து வருடங்களுக்குப் பின்னர் உண்மையான சுதந்திரத்தை உறுதி செய்வதற்காக நாம் எவ்வாறு மாற வேண்டும்? எதிர்வரும் புதிய நூற்றாண்டை நோக்கி (2023-2048) நாம் எவ்வாறு எமது பாதையை திசை திருப்புவது? இந்த பரிணாமத்தை நோக்கிய பாதையின் தொடக்கத்துக்குரிய சமிக்ஞை ‘லங்காரலங்காவின்’ இசை மூலம் எடுத்தியம்பப்பட்டது.
பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் செயலாளர், பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர், அமைச்சுக்களின் செயலாளர்கள், 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை வந்துள்ள வெளிநாட்டு தூதுக்குழுவினர், தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள், முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு படைகளின் பிரதானி, பொலிஸ் மா அதிபர், அரச அதிகாரிகள், கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வை கலந்து சிறப்பித்தனர்.