5 ஆயிரத்தை தொடும் பலி எண்ணிக்கை

துருக்கி மற்றும் சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இதுவரை 4,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். விரைவில் பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை தொடும் என மீட்பு படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் உடல்களை மீட்புக்குழுவினர் தொடர்ந்து கண்டெடுத்து வருவதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

பேரிடர் ஏற்பட்ட பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் கட்டடங்களுக்குள் செல்வதற்கே அஞ்சிக் கொண்டிருக்கின்றனர். நிலநடுக்கத்தால் யாரேனும் உயிர் பிழைத்துள்ளனரா என இடிபாடுகளுக்கிடையே தங்களின் வெறும் கைகளால் தோண்டி மீட்புப்பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகளுக்காக சிறப்பு குழுக்கள், மோப்ப நாய்கள், உபகரணங்களை வழங்கி உலக நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டி வருகின்றன. நிலநடுக்கம் குறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறுகையில், ‘நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு குழுக்கள் உடனடியாக அனுப்பப்பட்டன.

இந்த பேரழிவை நாங்கள் கூடிய விரைவில் கடந்து செல்வோம் நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா இதுவரை இரண்டு மீட்புக் குழுக்களை அனுப்பியுள்ளது.

Related posts