தற்போது திட்டமிட்டதற்கு இணங்க 2023 உள்ளூராட்சி சபைத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 09ஆம் திகதி நடத்த, தேர்தல் ஆணைக்குழுவிற்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செல்லுபடியற்றதாக்கி, அதனை ஒத்திவைக்குமாறு கோரி இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற கேணல் டபிள்யூ.எம்.ஆர். விஜேசுந்தர உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.
உயர் நீதிமன்ற நீதிபதிகளான எஸ்.துரைராஜா, ஏ.எச்.எம்.டி நவாஸ், ஷிரான் குணரத்ன ஆகியோர் முன்னிலையில் இம்மனு அழைக்கப்பட்டபோது நீதிமன்றம் ஆணைக்குழுவிற்கு குறித்த விடயத்தை தெரிவித்திருந்தது.
உள்ளூராட்சி சபைத் தேர்தலை சட்டப்படி நடத்துவதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதால், இவ்விவகாரத்தில் உத்தரவுகள் தேவையில்லை என உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.
மக்களின் வாக்குரிமையைப் பாதுகாக்க தேசிய தேர்தல் ஆணையம் கடமைப்பட்டுள்ளது என்றும் உயர் நீதிமன்றம் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து குறித்த மனு எதிர்வரும் பெப்ரவரி 23ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
குறித்த மனுவில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் உள்ளிட்ட அதன் உறுப்பினர்கள், நிதியமைச்சின் செயலாளர், பிரதமர், அமைச்சரவை செயலாளர், சட்ட மாஅதிபர் ஆகியோர் இம்மனுக்களின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்குமாறு நீதிமன்றத்தை கோரி ஐ.ம.ச. பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் ஆகியோர் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர, லக்ஷ்மன் கிரியெல்ல, அநுர பிரியதர்சன யாப்பா, எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரினாலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சட்டத்தரணி சுனில் வட்டகல, எரங்க குணசேகர, வி.சந்திரசேகரன் ஆகியோரால் இடை மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான அனைத்து நிதி மற்றும் ஏனைய வசதிகளையும் வழங்குவதற்கு சம்பந்தப்பட்ட சகல தரப்பினருக்கும் உத்தரவிடுமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சத்தியக் கடதாசி மூலம் அண்மையில் உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கையொன்றை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.