கஜேந்திரன், சட்டத்தரணி சுகாஸ் பிணை

கைது செய்யப்பட்ட இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினா் செல்வரசா கஜேந்திரன், சட்டத்தரணி க. சுகாஸ் உள்ளிட்ட 18 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து நீதமன்ற உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நேற்று (11) பிற்பகல் குறித்த 18 பேரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இவர்கள், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி, அதன் பின் யாழ்ப்பாண மேலதிக நீதவானின் வாசஸ்தலத்தில் நேற்று (11) சனிக்கிழமை இரவு 11.00 மணியளவில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து கைதானவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை விண்ணப்பம் செய்தனர்.

பொலிஸார் மற்றும் சட்டத்தரணிகளின் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மேலதிக நீதவான், 18 பேரையும் தலா ரூ. 3 இலட்சம் கொண்ட 2 ஆள் பிணைகளில் விடுவிக்க அனுமதித்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கை நீதவான் எதிர்வரும் பெப்ரவரி 22ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Related posts