அறிவியலின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பான செல்ஃபோனும் அதிலுள்ள டேட்டிங் செயலிகளும் இளம் தலைமுறையினரை, குறிப்பாக பெண்களை எப்படியெல்லாம் சீரழிக்கின்றன என்பதை ‘எப்புர்றா’ பாணியில் சொல்ல முயன்றிருக்கும் படம்தான் ‘பகாசூரன்’.
முன்னாள் ராணுவ அதிகாரியான அருள்வர்மன் (நட்டி நட்ராஜ்) நாட்டுக்கு சேவை செய்து களைத்த கையுடன் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி குற்றங்களையும் அதன் பின்னணிகளையும் வீடியோக்களாக்கி வியூஸ்களை குவிக்கிறார். அப்படியான ஒரு குற்றச் சம்பவம் குறித்து அவர் வீடியோ ஒன்றில் பேசிக்கொண்டிருக்கும்போது, அவரது அண்ணன் மகள் தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக செய்தி வர, சம்பவ இடத்திற்கு ஓடுகிறார். அவரது மரணத்தில் சந்தேகம் எழ குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் முனைப்பில் விசாரணையில் இறங்குகிறார் அருள்வர்மன்.
அதற்கு அப்படியே மறுபுறம் ‘என் அப்பனல்லவா’ என பாட்டு பாடிக்கொண்டு அறிமுகமாகும் பீமராசு (செல்வராகவன்) தீவிர சிவன் பக்தன். தீரா கொலைவெறியுடன் தேடித்தேடி சிலரை கொலைசெய்து தன் ஆத்திரத்தை தீர்த்துகொள்ளும் அவரிடம் சொல்லமுடியா சோகம் ஒளிந்திருக்கிறது. அவர் தேடிக்கொள்ளும் நபர்கள் யார்? அதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? அருள் வர்மனின் அண்ணன் மகள் தற்கொலையை தூண்டியது யார்? – இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்லும் படம் தான் ‘பகாசூரன்’.
‘ஆன்ட்ராய்டு மொபைலும், அதிலிருக்கும் டேட்டிங் ஆப்களும் ஆபத்தானவை’ என்பதைச் சொல்லி இளம் பிள்ளைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திவிடவேண்டும் என்கிற இயக்குநர் மோகன்.ஜியின் உன்னத முயற்சியை படம் புரிய வைக்கிறது. படத்தின் ஆரம்பத்தில் நடக்கும் கொலைகள், நட்டியின் இன்டலிஜன்ஸை காட்ட வைக்கப்பட்ட காட்சிகள் ஒருபுறமும், மறுபுறம் ‘மேங்கோ கால் டாக்ஸி’, கல்வித் தந்தை பட்டம் கொண்ட அரசியல்வாதி, கதைக்களமாக பெரம்பலூரை பயன்படுத்திக்கொண்டது என அரசியல் குறியீடுகளுக்கு இந்தப் படத்திலும் இயக்குநர் எந்த குறையும் வைக்கவில்லை.
தொடக்கத்தில் விறுவிறுப்பாக செல்லும் படம் ஒரு கட்டத்திற்கு பிறகு அதன் லாஜிக் மீறல்களால் வேகத்தை இழக்கிறது. இரண்டு மாணவிகளின் தற்கொலையை மையப்படுத்தி எழுப்பப்பட்டிருக்கும் கதையில், அவர்கள் தங்களை மாய்த்துக் கொண்டதற்கான காரணங்கள் வலுவிழந்திருப்பதால் ஒட்டமுடியவில்லை. அதனால் எமோஷனல் காட்சிகள் பெரிதாக கைகொடுக்கவில்லை.
போலவே, படத்தில் வரும் சண்டைக்காட்சிகளில் படு செயற்கைத்தனம். படத்தின் முதல் பாதியில் டேட்டிங் ஆப்கள் தான் பிரச்சினைகளுக்கு காரணம் என கூறிவிட்டு, மையக்கருவான இரண்டாம் பாதியில் அதைப்பற்றி பேசாமல் மற்றொரு பிரச்சினையை கையிலெடுத்திருப்பதன் மூலம் படத்தின் நோக்கம் தெளிவில்லாமல் காற்றில் ஆடும் படகு போல இங்கும் அங்கும் அசைந்தாடுகிறது.சுவாரஸ்யமின்றி எளிதாக நடக்கும் விசாரணைகள், மகாரபாரதத்தில் வரும் வதங்களை ரெஃபரன்சாக்கி,‘அந்நியன்’ பட கும்பிபாக காட்சிகளை நினைவூட்டியது, இழுத்துச் செல்லப்பட்டட்டட்ட இரண்டாம் பாதி அயற்சி. ‘சென்னை பாண்டிச்சேரிலாம் வேண்டாம்மா. அங்கலாம் வெள்ளைக்காரங்க மாதிரி ஆகிட்டாங்க மா. பெரம்பலூர்லனா படி மா…’ என்ற வசனம் மூலம் இயக்குநர் நிறுவ முயல்வது என்ன?
எமோஷனல் காட்சி ஒன்றில் உடைந்து அழும் செல்வராகவன் நடிப்பில் நம்மையும் கலங்க வைத்துவிடுகிறார். கொலை வெறிக்காட்சிகளில் ‘சாணிக்காயிதம்’ செல்வா சார் சாயலிருந்தாலும் கதாபாத்திரத்திற்கு பொருந்தி போகிறார். நட்டி நட்ராஜ் நடிப்புக்கு தீனி போடும் கதாபாத்திரம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். ஆனால், அவர் கதாபாத்திரம் இல்லாவிட்டாலும் கதைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற உண்மையை படம் முடிந்த பிறகே உணர முடிகிறது.
தவிர, ராதாரவி, தாரக்ஸி, கே.ராஜன்,கூல் சுரேஷ்,சசிலயா தேவையான பங்களிப்பை செலுத்துகின்றனர். ‘என்னப்பன் அல்லவா’ பாடலில் திரையரங்கை அதிர வைக்கிறார் சாம்.சி.எஸ். பின்னணி இசை மூலம் செல்வராகனுக்கான ‘டெரர்’ லுக்கை ஒருபடி கூட்டியிருக்கிறார். மற்ற பாடல்கள் எதுவும் பெரிய அளவில் கவனம் ஈர்க்கவில்லை. ஃபருக் ஜே பாட்ஷா ஒளிப்பதிவில் காட்சிகள் படத்தின் தரத்தை கூட்ட உதவியிருக்கின்றன. மோகன்.ஜியின் முந்தைய படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தில் தொழில்நுட்பத்தின் வலு கூடியிருக்கிறது.
பெண்களைப் பாதுகாப்பது குறித்து வகுப்பெடுக்கும் படத்தில் ஆபாச நடனம் வைக்கப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. தவிர, பெண்களுக்கான விழிப்புணர்வு குறித்து பேசுவதாக சொல்லும் படத்தின் ஓரிடத்தில், ஆபாச வீடியோவுக்கு எதிராக காவல் நிலையம் செல்ல தயங்கும் செல்வராகவன், ‘இது கௌரவப் பிரச்சினை, வீடியோ வெளியே விட்டா நமக்கு தான் அவமானம்’ என பிற்போக்கு வசனங்களை உதிர்த்து எதிராளிக்கு எனர்ஜி கொடுத்து உற்சாகப்படுத்துகிறார்.
‘அனல் மேலே பனித்துளி’ போன்ற படங்கள் இதனை உடைத்து குற்றவாளிகளை கூண்டில் ஏற்றுவதை நோக்கமாக கொண்டிருக்கும் வேளையில் ‘பெண்களுக்கான விழிப்புணர்வு’ படமான ‘பகாசூரன்’ செய்வது நியாயமாரே..? தொடர்ந்து படம் கல்லூரியில் நடக்கும் பாலியல் தொந்தரவுக்கும், ஆபாச வீடியோவை வைத்து ப்ளாக் மெயில் செய்வதற்கும், டேட்டிங் அப்லிகேஷன் உள்ளிட்டவற்றிற்கு எல்லாம் காரணம் ஆன்ட்ராய்டு போன்களின் வருகையே என குறிப்பிட்டு, அதை பயன்படுத்துவது ஆபத்தானது, பெற்றோர்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்பதை தீர்வாக முன்வைப்பது விவாதத்திற்குரியது.
மொத்தத்தில் எதிர்பார்ப்புடன் தொடங்கும் ‘பகாசூரன்’ படத்தின் முதல் பாதி அடுத்தடுத்த தர்க்கப் பிழைகளாலும், பழமைவாதத்தாலும், எடுத்துக்கொண்ட கருத்தில் தடுமாற்றத்தை நிகழ்த்தியதாலும் எதிரிகளை வதம் செய்யாமல்..!