5 ஸ்டார் உணவகங்களில் விற்கப்படும் உணவைப் போல் அல்லாமல் கோயில்களில் கொடுக்கப்படும் பிரசாதமாக கல்வியை வழங்க வழி பாடமெடுக்கிறது இந்த ‘வாத்தி’.
90களின் இறுதியில் ஆசிரியர்கள் இல்லாததால் அரசுப் பள்ளிகள் மூடப்படுகின்றன. இந்த அவல நிலையை மாற்றியமைக்க தனியார் பள்ளிகள் சார்பில் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். அதன்படி திருப்பதி எஜுகேஷனல் இன்ஸ்டியூட்டிலிருந்து பாலமுருகன் (தனுஷ்) என்ற ஆசிரியர் தமிழக – ஆந்திர எல்லையில் உள்ள சோழபுரம் என்ற கிராமத்தில் இயங்கும் அரசுப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்.
மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கில் செல்லும் பாலமுருகனுக்கு பல்வேறு அதிர்ச்சிகளும், சவால்களும் அங்கே காத்திருக்கின்றன. அதையெல்லாம் கடந்து பாலமுருகன் அங்கிருக்கும் மாணவர்களின் கல்வித் தரத்தை எப்படி மேம்படுத்துகிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை.
தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியிருக்கிறார். தனியார்மயத்துடன் வியாபாராகும் கல்வி, அரசுப் பள்ளிகள் மூடப்படுவதற்கான காரணங்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள் மீதான அரசின் அலட்சியப்போக்கு, இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் தனியார் பள்ளிகள், அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகும் படிப்பு என கல்வியின் பல்வேறு பக்கங்களை புரட்டுகிறது படம். பெண்கல்வியின் அவசியம், சாதிப் பாகுபாடு தொடர்பான உரையாடல் காட்சியும் அழுத்தம் கூட்டுகிறது.
‘பணம் எப்டி வேணாலும் சம்பாதிக்கலாம்; ஆனா படிப்பு தான் மரியாதையை சம்பாதித்து தரும்’, சாதி குறித்து பேசுகையில், ‘நமக்கு தேவைப்படும்போது அவங்க என்ன ஆளுங்கன்னு தெரியறதில்லை. எந்த ஆளும் தேவையில்லாத ஆளுமில்ல’, ‘படிப்பை பிரசாதம் மாதிரி கொடுங்க… 5 ஸ்டார் ஹோட்டல் சாப்பாடு மாதிரி விக்காதீங்க’ போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன.
வெகுஜன சினிமாவுக்கான அம்சங்களுடன் தொடங்கும் படம் தெலுங்கு சினிமாவை பார்க்கும் உணர்வை கொடுக்காமலில்லை. பொருந்தாத டப்பிங் அதற்கு உதாரணம். கதையுடன் ஒட்டாத காதல் காட்சிகள், ‘வா வாத்தி’ பாடல் கம்போஸுக்காக வேறு வழியில்லாமல் இணைக்கப்பட்ட உணர்வை கொடுக்கிறது.படம் முழுக்க இழையோடும் தனுஷின் மிகை நாயகத்தன்மை துருத்தல். ஒற்றை ஆளாக தனுஷ் சொல்வதை ஊரே கேட்பது, மொத்த பேரையும் படிக்க வைப்பது, எந்தப் பிரச்சினை வந்தாலும் முந்திக்கொண்டு வந்து நிற்பது என படத்தில் தனுஷ் இல்லை. மொத்தப் படமுமே தனுஷாக இருக்கிறது. ‘வாத்தி’ என சொல்லப்பட்டாலும் மாணவனுக்கான லுக்கில், ஆக்ஷன், எமோஷன் என அழுத்தமான நடிப்பில் திரையை ஆக்கிரமித்திருக்கிறார் தனுஷ்.
அழகில் அசரடிக்கும் சம்யுக்தா பாதியில் காணாமல் போக, வழிதவறி வந்த குழந்தையாய் இரண்டாம் பாதியில் திடீரென மீண்டும் வந்து சேர்கிறார். ஆனாலும் நடிப்பில் குறைவைக்கவில்லை. கார்ப்பரேட் வில்லன்களை காட்டிய தமிழ் சினிமாவுக்கு கல்வி வில்லனாக சமுத்திரக்கனியை காட்டியிருக்கிறார் வெங்கி அட்லூரி. அழுத்தமில்லாத அவரது கதாபாத்திர வார்ப்பு, நாயகனுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்காமல் விலகியிருப்பதால் நாமும் திரையில் அவரிடமிருந்து விலகியிருக்க வேண்டியிருக்கிறது. கென் கருணாஸ் சாய்குமார், தணிகெல்லா பரணி, சாரா, இளவரசு கதைக்கு தேவையான பங்களிப்பை கொடுக்க, வாட்ஸ்அப் ஸ்டேடஸ் போல 30 செகண்ட் வந்து செல்கிறார் பாரதிராஜா.கடவுளாகவும், தியாகியாகவும் சித்தரிக்கப்படும் தனுஷுக்கான சோகப் பாடல் காய்ந்து போன பசைப்போல ஒட்டவில்லை. அதேபோல பிரச்சினையை மையப்படுத்தி சோகமாக சென்றுகொண்டிருக்கும் கதையில் திடீரென காமெடி என்ற பெயரில் சில ட்ராக்குகள் சோதிப்பு. இறுதியில் தனுஷுக்கான பாரதியார் வேஷம் சர்காஸ்டிக் முயற்சியோ என எண்ணவைக்காமலில்லை. ‘வா வாத்தி’, ‘நாடோடி மன்னன்’ பாடல்களில் ஜி.வி.பிரகாஷின் இசை தனி முத்திரை பதிக்க, பின்னணி இசையிலும் கவனிக்க வைக்கிறார். ஒளிப்பதிவும், படத்தொகுப்பும் காட்சிகளுக்கு கச்சிதம்.
தனியார் மயமாக்கப்படும் கல்வியையும், அதன் முக்கியவத்துவத்தை உணர்த்தும் படத்தின் நோக்கம் பாராட்டத்தக்கது. ஆனால், அதை உணர்த்த திரையரங்கை க்ளாஸாக்கி பாடமெடுக்கும் ‘வாத்தி’ தனுஷும், சமுத்திரகனியை வில்லனாக்கியபோதிலும் அவரின் ‘சாட்டை’ பட சாயலை நினைவூட்டியிருக்கும் திரைக்கதையிலும் ‘பாஸ் மார்க்’ வாங்கவே போராடியிருக்கிறார் இந்த ‘வாத்தி’.