பயிற்சி இல்லாமல் நடிக்க வந்தேன் என்று பட விழா நிகழ்ச்சியில் டைரக்டரும், நடிகருமான பாக்யராஜ் பேசும்போது தனது காலத்து சினிமா அனுபவங்களை பகிர்ந்தார்.
மித்ரன் ஜவஹர் ‘அரியவன்’ என்ற படத்தை இயக்கி உள்ளார்.
நாயகனாக ஈஷான், நாயகியாக பிரணாஸி நடித்துள்ளனர்.
நவீன் தயாரித்துள்ளார். இந்த பட விழா நிகழ்ச்சியில் டைரக்டரும், நடிகருமான பாக்யராஜ் பங்கேற்று பேசும்போது தனது காலத்து சினிமா அனுபவங்களை பகிர்ந்தார்.
அவர் கூறும்போது, “நான் சினிமாவில் நடிக்க வந்தபோது கதாநாயகனுக்கு தேவையான பயிற்சி எதுவுமே எடுக்கவில்லை. பார்த்திபன், பாண்டியராஜன் ஆகியோரும் பயிற்சி எடுத்துக் கொள்ளாமல்தான் நடிகர்களாக ஆனார்கள்.
நடிகரான பிறகுதான் நடிப்பு சம்பந்தமான நிறைய விஷயங்களை கற்றோம்.
ஆனால் இந்த படத்தின் கதாநாயகன் ஈஷான் நடிப்பு பயிற்சி, கராத்தே பயிற்சி போன்றவற்றை எடுத்துக்கொண்டு நடிக்க வந்து இருக்கிறார்.
நான் கதாநாயகனாக அறிமுகமான காலத்தில் தினமும் அதிகாலையில் எழுந்து சேவிங் செய்ய வேண்டும்.
ஆனால் இப்போதுள்ள கதாநாயகர்கள் பலரும் தாடியுடன் இருக்கிறார்கள்.
நான் ஆரம்பத்தில் வான் மேகங்களே என்ற பாடல் காட்சியில் நடிக்க கஷ்டப்பட்டேன்.
ஆனால் இப்போது உதடு அசைவுகள் பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை.
சினிமாவில் நல்ல கருத்தை சொல்ல வேண்டும். இந்த படத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களையும், தண்டனைகளையும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சொல்லி இருக்கிறார்கள்” என்றார்.