ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 27 ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இந்த வாக்குகளை எண்னும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
தற்போதுவரை 5 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
இந்த நிலையில், ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை 80 சதவீதம் நிறைவேற்றியுள்ளார்.
அதன் எதிரொலியாக இந்த வெற்றியை காண முடிகிறது. ஈரோட்டில் சில பணிகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. எனது மகன் விட்டுச்சென்ற பணிகள் மற்றும் இதர பணிகளை அமைச்சர் முத்துசாமியுடன் சேர்ந்து முதல் அமைச்சரை சந்தித்து ஈரோடு மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபடுவேன்.
நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் தமிழகத்தில் திமுக தலைமையிலான மத சார்பற்ற கூட்டணி மிகப்பெரிய வெற்றிபெறும் என்பதற்கு இந்த தேர்தல் ஒரு எடுத்துக்காட்டு. இந்த வெற்றிக்கு திமுக அமைச்சர்கள், கனிமொழி, உதயநிதி, கமல் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர்.
இந்த வெற்றியின் பெரும் பங்கு முதல் அமைச்சரையே சாரும். தேர்தல் சரியாக நடக்கவில்லை என சிலர் கூறுகின்றனர். தேர்தல் ஆணையம் சரியாக செயல்படுகிறது என்பதை அதிமுகவே கூறியுள்ளது.
இந்த பெரிய வெற்றி தான் என்றாலும் கூட வெற்றியை கொண்டாடும் மன நிலையில் நான் இல்லை. மகன் விட்டுச்சென்ற பணியை செயல்படுத்தவே நான் உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.