யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்லும் நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயமுள்ளதாக சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் எச்சரித்துள்ளார்.
யாழ்.உரும்பராய் ஞானவைரவர் அறக்கட்டளை நிறுவனத்தின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான கற்றல் உபரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
யாழ்.தீவகத்தில் பல பாடசாலைகள் போதியளவு மாணவர் இன்மையால் மூடப்பட்டுள்ள அதேவேளை வலிகாமம் கிழக்கில் இரண்டு பாடசாலைகள் அண்மையில் மூடப்பட்டன. பாடசாலைகளை மூடுவதற்கு மாணவர்கள் இல்லாமையே காரணமெனக் கூறப்பட்டாலும் யாழ். மாவட்டத்தில் பல தனியார் பாடசாலைகள் முளைத்த வண்ணமுள்ளன.
யாழ்ப்பாணத்தில் புகழ் பூத்த கல்லூரிகளில் ஒன்றாகத் திகழ்ந்த உரும்பிராய் இந்துக் கல்லூரி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.
உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற பல மாணவர்கள் உலகளாவிய நீதியில் உயர் பதவிகளை வகித்துள்ளதுடன் இன்றும் பல உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். இவ்வாறான கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்லும் நிலையில் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை இந்தப் பாடசாலை எதிர்நோக்கியுள்ளது.
அத்துடன் யாழ். மாவட்டத்திலுள்ள அறக்கட்டளை நிறுவனங்களில் ஐந்துக்கும் குறைவான நிறுவனங்களே பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இலங்கையிலுள்ள அறக்கட்டளை நிறுவனங்களில் முஸ்லிம்களின் அறக்கட்டளை நிறுவனங்களே அதிகளவில் பாராளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரவூப் ஹக்கீம் நீதி அமைச்சராக இருந்தபோது முஸ்லிம் அமைப்புகள் சார்ந்து இயங்கும் பெரும்பாலான அறக்கட்டளை நிறுவனங்களை இலங்கைப் பாராளுமன்றத்தில் பதிவு செய்தார். இலங்கையில் மட்டுமல்லாமல் சர்வதேச ரீதியாகவும் முஸ்லிம்கள் சார்ந்து தனியான பல்கலைக்கழகங்கள் இயங்குகின்றன.ஆனால் தமிழ் மக்கள் சார்ந்து எந்தவொரு பல்கலைக்கழகமும் ஆரம்பிக்கப்படவில்லை.
எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் தமது கடமைகளை உரிய வகையில் நிறைவேற்றாது போனால் எமது இனத்தின் பரம்பல் குறைந்து செல்வதுடன் எதிர்காலத்தில் பல்வேறு சவால்களை தமிழ் மக்கள் எதிர்நோக்க வேண்டியேற்படுமெனவும் அவர் தெரிவித்தார்.