சர்வதேச மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மகளிருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அதன் விவரம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன். அனைத்து மகளிருக்கும் எனது இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துகள்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: “தமிழ்நாடு அரசின் மகளிருக்கான புதிய கொள்கை“யும் விரைவில் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட உள்ளது. அதன்மூலம் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தில் குடும்பத் தலைவர்களாக உள்ள பெண்களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலை தருவது, முக்கியப் போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகளை பெண்களுக்கு வழங்குவது என பெண்களின் முன்னேற்றத்துக்கான பல சீரிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். அனைத்துக்கும் முத்தாய்ப்பாக வரும் நிதி நிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: தமிழக பெண்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக எண்ணற்ற முன்னோடித் திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றினார். அவரது நல்லாசியோடு எனது தலைமையிலான ஆட்சியிலும் பெண்கள் நலனுக்காக ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அறிவின் உருவாய், ஆற்றலின் வடிவமாய், தாய்மைக்கு இலக்கணமாய் திகழும் பெண்கள் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும், வாழ்வில் சந்திக்கும் சோதனைகளை உறுதியுடன் எதிர்கொண்டு அவற்றை வெற்றிப் படிகளாக்கி, சரித்திரம் படைத்திட வேண்டும்.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்: வீட்டை ஆள்வதில் தொடங்கி நாட்டை ஆள்வது வரை அனைத்திலும் மகளிருக்கு சமத்துவமும், சம உரிமையும் வழங்கலாம். அத்தகைய கனவு சமுதாயத்தை உருவாக்க வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும். அந்த கடமையை நிறைவேற்ற இந்நாளில் அனைவரும் உறுதியேற்போம்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: மகளிர் சாதனைகளைப் படைக்க உதவ வேண்டும் என்று இந்நாளில் அனைவரும் உறுதியேற்க வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: இன்றைய 21-ம் நூற்றாண்டு கணினி யுகத்தில் பெண்கள் எல்லா நிலைகளிலும் முன்னேறிப் பாய்ந்து செல்வதைக் கண்டு அகிலம் வியக்கின்றது. பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் மகளிருக்கு உலக மகளிர் தின வாழ்த்துகள்.
மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: சாதி, மதம் கடந்து ஆணுக்கு நிகர் பெண் என்ற பாலின சமத்துவத்திற்கான போராட்டங்களில் வலுவாகப் பங்கேற்க வேண்டுமென தமிழக பெண்களை உலகப் பெண்கள் தினத்தன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அறைகூவி அழைக்கிறது.
இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்: நடப்பாண்டு பெண்கள் தினத்தில் பாலின வேறுபாடுகளையும் அடக்குமுறைகளையும் ஆதரித்து வரும் வகுப்புவாத சக்திகளின் கரங்களில் சிக்கியுள்ள நாட்டின் அதிகாரத்தை மீட்கும் போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்து, முன்னேறுவோம் என உறுதியேற்க வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்: பெண்கள் தொடாத துறையே இல்லை. தொட்டதில் வெல்லாத செயலே இல்லையென யாவையுமாகி நிற்கும் பெண்கள் மேலும் உயர்ந்து கொண்டே செல்வர். இது நவயுக நியதி. மகளிர் நாள் வாழ்த்துகள்.
இதேபோன்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன், சசிகலா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சமக தலைவர் சரத்குமார், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.