அண்ணாமலை வாய் கொழுப்புடன் பேசுவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, அதிமுக – பாஜகவினருக்கு இடையில் நடைபெற்று வரும் வார்த்தைப் போர் தொடர்பான கேள்விக்கு, ”பாஜகவுக்கு சகிப்புத்தன்மை இல்லை. அதிமுக, திமுகவில் இருந்து பாஜகவில் யார் வேண்டும் என்றாலும் இணையலாம்.
ஆனால் பாஜகவில் இருந்து யாரும் மற்ற கட்சியில் இணையக் கூடாதா. ஜனநாயக நாட்டில் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு மாறுவது சகஜம் தான். எங்கள் கட்சியில் இருந்து பாஜகவில் சேர்ந்த போது இனித்தது.
தற்போது பாஜகவில் இருந்து அதிமுகவில் சேரும் போது கசக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும், ”பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை வேண்டும்.
வாய் அடக்கம் தேவை. வாய் கொழுப்புடன் பேசக் கூடாது. மத்தியில் ஆளுகின்றோம் என்ற திமிருடன் பேசக் கூடாது. எடப்பாடி பழனிசாமி படத்தை எரிக்கும் அளவுக்கு பாஜகவினர் தரம் தாழ்த்து போய்விட்டனர். இவர்களை அடக்கி வைக்க வேண்டிய அண்ணாமலை வாய் கொழுப்புடன் பேசுகிறார்” என்றார்.
நானும் ஜெயலலிதா போன்ற தலைவர் தான் என்ற அண்ணாமலையின் பேச்சு தொடர்பான கேள்விக்கு, “ஜெயலலிதாவுக்கு இணையான தலைவர் பிறக்கபோவது இல்லை. மோடியா? இந்த லேடியா? என்று கூறி தனித்து நின்று வெற்றி பெற்றவர் ஜெயலலிதா.
அவரை போல எவராலும் வர முடியாது. உயர உயர பறந்தாலும் ஊர் பருந்து குருவி ஆகாது” என்று தெரிவித்தார்.