யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் வீட்டினை சேதப்படுத்தி தீவைத்து ஒன்றரைக் கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சேதப்படுத்தியிருந்தது.
இது தொடர்பில் பொலிஸராரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதேபோல் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸராரினால் நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொ. மேனன் தலைமையின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
மேலும் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வன்முறைச் சம்பவங்களுக்கு பயன்படுத்துவதற்கென யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி போலி இலக்கத்தகடுகளை மாற்றி பயன்படுத்தியமை தெரியவந்ததுள்ளது.
சில போலி இலக்கத்தகடுகளும் வன்முறைச்சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன.