ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய வழக்கு ஒன்றிற்காக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று காலை முன்னிலையானார்.
ஏப்ரல் 21 தாக்குதலை தடுக்கத் தவறியமை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை முன்வைத்து, அருட்தந்தை சிறில் காமினி உள்ளிட்ட இருவரால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த மனு மீதான விசாரணைகள் கொழும்பு, கோட்டை நீதவான் நீதிமன்றில் இடம்பெறுகின்றன.
———
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்து ஒன்றில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் 40ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த அவர் கல்முனை வைத்தியசாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் பேருந்துடன் மோதிக்கொண்ட விபத்திலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
விபத்தை அடுத்து அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.
தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவான சிங்களவரான அவர் 2010 ஆம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் போட்டியிட்டு பாராளுமன்றுக்கு தெரிவானார்.
எனினும் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்து கொண்டார். அதேநேரம் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஊடாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அவர் அதில் தோல்வியடைந்தார்.
—–
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின்படி இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது.மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்வனவு வீதம் நேற்றைய வீதமான ரூ. 327.20இலிருந்து ரூ. 332.06 ஆகவும், விற்பனை வீதம் ரூ. 346.37 இலிருந்து ரூ. 351.51 சதமாகவும் உள்ளது.
கொமர்ஷல் வங்கியில், கொள்வனவு வீதம் நேற்றைய விகிதமான ரூ. 332.96 முதல் ரூ. 331.48 சதமாகவும் விற்பனை வீதம் ரூ. 351.50 சதத்திலிருந்து ரூ. 355.00 ஆகவும் அதிகரித்துள்ளது.
இதனிடையே சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை நேற்றைய விலையான ரூ. 330 இலிருந்து ரூ. 335 ஆகவும், விற்பனை விலை ரூ. 345 இலிருந்து ரூ. 350ஆகவும் அதிகரித்துள்ளது.