இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் ஆயுதப்படையின் இருபத்தைந்து அதிகாரிகள் உட்பட மூவாயிரத்து ஐநூறுக்கும் அதிகமானோர் சட்டவிரோதமான முறையில் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பெப்ரவரி மாதத்தில் மட்டும், பத்து அதிகாரிகள் உட்பட சுமார் 1,500 ஆயுதப் படை வீரர்கள் வெளியேறியுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிரிகேடியர் உட்பட பதின்மூன்று அதிகாரிகள் தனிப்பட்ட பயணமாக வெளிநாடு சென்று இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதன்காரணமாக புதிய கடவுச்சீட்டுகளை தயாரிப்பதற்கும் கடவுச்சீட்டுகளை புதுப்பிப்பதற்கும் முப்படைகளின் தளபதிகளின் பரிந்துரைகளை பெற்றுக்கொள்ளுமாறு பாதுகாப்பு அமைச்சு குடிவரவு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார சிரமங்களினால் கடனை செலுத்த முடியாத நிலை, அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகளுக்கு உள்ள வசதிகள் குறைப்பு போன்ற காரணங்களால் இராணுவத்தினர் வெளியேற ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
—–
உள்ளூராட்சி சபைத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது என்றும், ஜனாதிபதித் தேர்தல் நவம்பரில் நடத்தப்படும் எனவும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
பேலியகொட ஜயதிலகரராம விகாரையில் நேற்று இடம்பெற்ற சுவதாரணி தீபா மருத்துவ சிகிச்சை தொடர்பிலான அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
“தேர்தலை ஒத்திவைக்க நாங்கள் விரும்பவில்லை. ஜனநாயக நாட்டில் தேர்தலை ஒத்திவைப்பது ஏற்புடையதல்ல. கூடிய விரைவில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவோம். இருப்பினும் ஏப்ரல் 25-ம் திகதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை. ஜனாதிபதி தேர்தல் நவம்பரில் நடைபெறும்,” என்றார்.
“நாடு முழுவதும் சுமார் 8,000 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளனர், இது நாட்டுக்கு சுமை. ஆணைக்குழு நியமிக்கப்பட்டு உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அறிக்கை கிடைத்தவுடன் தொடர தயார்” இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.