வீட்டு லாக்கரில் இருந்த நகைகள் மாயம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டு லாக்கரில் இருந்த 60 சவரன் நகை, வைரம், நவரத்தின கற்கள் மாயமானதாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அளித்த புகாரில், 2019ம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் லாக்கர் மாறி மாறி வைக்கப்பட்டிருந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாக்கரில் இருந்த நகைகள் குறித்து வீட்டில் பணிபுரியும் 3 வேலைக்காரர்களுக்கும் தெரியும் என புகார் மனுவில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் அளித்த புகாரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

——-

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடிகர் விஷ்னு விஷாலை வைத்து, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் நீதிமன்ற வளாக காட்சிகள் திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்டன.

அப்போது பொதுமக்களிடம் படக்குழுவின் பவுன்சர்கள் கடுமையாக நடந்து கொண்டதாகவும், வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பின்புறம் உள்ள அரசு விடுதிக்கு மாணவிகள் செல்ல முடியாமல் பாதிக்கபப்ட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், அலுவலகத்தில் உள்ள இ – சேவை மையத்துக்கும் பொதுமக்கள் செல்ல இயலாத வகையில் சுற்றி கயிறு கட்டியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் படப்பிடிப்பு நடத்தியதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் படக்குழுவிடம் விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

‘லால் சலாம்’ என்ற படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது இயக்கி வருகிறார். இதில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இப்படம் 2023-ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

Related posts