சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து இலங்கைக்கு கிடைத்துள்ள விரிவான நிதி வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையில்,
“கடந்த ஜூலை 9 ஆம் திகதி நான் தீப்பிடித்த நாட்டையே பொறுப்பேற்றேன். குழப்பத்தில் இருந்த ஒரு நாடு. நாளைய தினம் பற்றிய நம்பிக்கை ஒரு துளி கூட இல்லாத நாடு. அதிகாரப்பூர்வமாக திவாலான நாடு என அறிவிக்கப்பட்ட நாடு. பணவீக்கம் 73% வரை உயர்ந்ததாக அறிவிக்கப்பட்ட நாடு.
நாட்டில் எரிபொருள் மற்றும் எரிவாயு வரிசையில் பல நாட்களாக தவித்த மக்கள் வாழ்ந்த நாடு. பாடசாலைகள் மூடப்பட்ட நாடு. ஒரு நாளைக்கு 10 – 12 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நாடு. விவசாயிகளுக்கு உரம் இல்லாத நாடு.
இத்தகைய பின்னணியில் யாரும் பொறுப்பேற்க விரும்பவில்லை. சிலர் பின் சென்றார்கள். சிலர் ஜாதகம் பார்க்க காலம் தேவை என்றார்கள். சிலர் நழுவினர். சிலர் பயந்தார்கள். யாரும் பொறுப்பேற்க முன்வராத போது தான் என்னிடம் கேட்கப்பட்டது.
சவாலை நிபந்தனையின்றி ஏற்றுக்கொண்டேன். பாராளுமன்றத்தில் எனக்கு அதிகாரம் இல்லை. என்னிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கவில்லை. இவை எதுவும் இல்லாத போதும் என்னிடம் இருந்தது ஒரே ஒரு பலம் தான். அது நான் பிறந்து, வளர்ந்து, கல்வி கற்ற என்னுடைய நாட்டை என்னால் மீட்க முடியும் என்ற நம்பிக்கை மட்டும் தான் எனக்கு இருந்த ஒரே பலம்.
இந்த மிகப் பெரிய சவாலை ஏற்கும் போது, கடந்த கால அனுபவங்களினால் எனக்கு இருந்த நம்பிக்கையை கொண்டு நான் நாட்டை பொறுப்பேற்றேன். நான் வீழ்ந்தாலும் நாடு வீழாது என்ற எண்ணத்தில் சவாலை ஏற்றுக்கொண்டேன்…” என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
கடந்த வருடம் ஜூலை மாதம் நாட்டில் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்ட போது, யாரும் இந்தப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருக்கவில்லை எனவும், அதனை ஏற்குமாறு தம்மிடம் கோரப்பட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் எனக்கு அதிகாரம் இல்லை. என்னுடையது என்று கூறுவதற்கு பாராளுமன்றத்தில் எனது கட்சி உறுப்பினர்கள் யாரும் இருக்கவில்லை. ஆனால், நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப முடியும் என்ற நம்பிக்கையே தனது பலம் என்றும் அவர் கூறினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வசதியைப் பெறுவது, இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நாட்டை உயர்த்துவதற்கும் ஒரு படியாக அமையும். இந்த கடன் வசதி 4 ஆண்டுகளில் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும். முதல் தவணையாக 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். இதற்கு மேலதிகமாக ஏனைய தரப்பினர்களிடம் இருந்து சுமார் 7 பில்லியன் டொலர்களை துரித கடனுதவியாக நாடு எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
சிலர் IMF EFF ஐ இன்னொரு கடனாகக் கருதுவதாகவும், சிலர் பெற்ற பணத்தில் நாட்டின் முழுக் கடனையும் செலுத்த முடியாது எனவும் கூறுகின்றனர். இந்தக் கருத்ததுக்கள் அறியாமை அல்லது அரசியல் இலாபங்களுக்காக நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விருப்பத்தை வெளிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
IMF EFF ஊடாக இலங்கைக்கு சர்வதேச அங்கீகாரம் மீளக் கிடைக்கும் எனவும், நாடு வங்குரோத்தாகாது என்று உறுதியளிப்பதாகவும், சர்வதேச அங்கீகாரத்தை மீண்டும் பெற வங்கிகளுக்கு உதவுவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
குறைந்த வட்டியில் கடன்களுக்கான வாய்ப்புகளை இது உருவாக்கி, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் மற்றும் வலுவான புதிய பொருளாதாரத்திற்கான அடித்தளத்தை அமைக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இந்நாட்டு மக்கள் பல இடர்பாடுகளுக்கு மத்தியில் நிதானமாகவும் பொறுமையாகவும் பல அழுத்தங்களையும் துன்பங்களையும் தாங்கிக்கொண்டு செயற்பட்டதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் வசதியை பெற்றுக் கொள்வதற்கு இந்த நாட்டு மக்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டமை பெரும் பலம் என ஜனாதிபதி குறிப்பிட்டதுடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
நாம் இப்போது ஒரு புதிய பயணத்தைத் தொடங்குகிறோம். இந்த செயல்முறை முழுவதும், நாம் பல பொருளாதார சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டியேற்படும். நமது வெற்றியின் அடித்தளம் இந்தப் பாதையில்தான் இருக்கும். இந்த சீர்திருத்தங்களில் சில ஏற்கனவே 2022 இடைக்கால வரவு செலவுத் திட்டம் மற்றும் 2023 வரவுசெலவுத்திட்டம் மூலம் முன்மொழியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
நாங்கள் இன்னும் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தி வருகிறோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தனது விசேட உரையின் போது தெரிவித்தார்.