பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் தமிழில் ரட்சகன் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
முதல்வன் படத்தில் இடம்பெற்ற சக்கலக்க பேபி பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார்.
சுஷ்மிதா சென்னுக்கு சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு தற்போது சிகிச்சைக்குப்பின் குணமடைந்து இருக்கிறார்.
இதையடுத்து சுஷ்மிதா சென் கூறும்போது, “பெண்களுக்கும், ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கும் மாரடைப்பு வராது என்பது உண்மை இல்லை என்பது என் மூலம் நிரூபணமாகியுள்ளது.
இதய நாளங்களில் 90 சதவீதம் அடைப்பு இருந்தது. ஆனாலும் நான் ஆரோக்கியமாக இருந்ததால்தான் காப்பாற்ற முடிந்தது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். எனவே பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.
அதற்காக உடலை வருத்திக்கொள்ள வேண்டாம். வாரத்தில் மூன்று நான்கு நாட்கள் உடற்பயிற்சி செய்தால் போதும்.
போதுமான அளவு தூக்கம் வேண்டும். ஆரோக்கியமான உணவு, தூக்கம், உடற்பயிற்சி மூன்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
அப்போதுதான் இதயத்தை காப்பாற்றிக் கொள்ள முடியும்.
மன அழுத்தம், மன உளைச்சல் போன்றவை மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
எனவே பெண்களே தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சிக்கு ஒதுக்குங்கள்.
ஆரோக்கியத்தை அலட்சியம் செய்யாமல் நேரத்திற்கு சாப்பிடுங்கள். மன இறுக்கத்துக்கு இடம் அளிக்க வேண்டாம். மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள்” என்றார்.