நீதித்துறையின் கௌரவத்தையும் ஆளுமையையும் குழிதோண்டிப் புதைக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டறிக்கையில் நேற்று (22) கையொப்பமிட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி, சுதந்திர மக்கள் கூட்டமைப்பு, தேசிய மக்கள் சக்தி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டனர்.
சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் தொடர்பில் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியை நாடு எதிர்கொண்டுள்ளதாகவும் அவ்வாறான நிலைமைக்கு எதிராக கூட்டு வேலைத்திட்டம் தேவை எனவும் கூறி இந்த கூட்டறிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
——
கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பியகம மதுவரி திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கு அமைவாக குறித்த இரு பொலிசாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இரு பொலிசாரை தொடர்பு கொண்ட தகவலாளர்களான நால்வர் கஞ்சா பொதியினை பெற்றுக்கொள்வதற்காக சென்றுள்ளனர்.
இதன் போது, குறித்த இரு பொலிசாரும் மதுவரி திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
—–
பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதத்திற்கு எதிரானது’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்த சட்டமூலம், ஆங்கிலத்தில் எண்டி – டெரரிசம் (anti-terrorism) எனக் குறிப்பிட்பட்டுள்ளது. 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது இந்த சட்டமூலத்தை தயாரிப்பதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.