பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாம்பே ஜெயஸ்ரீ, பிரிட்டனில் உடல்நிலை பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். அவருக்கு லண்டனில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லிவர்பூலில் இயங்கி வரும் நட்சத்திர விடுதி ஒன்றில் அவர் சுயநினைவை இழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஆன்யரிஸம் (Aneurysm) பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாக தகவல். அவருக்கு மூளையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல். பொதுவாக இந்த பாதிப்பு தமனி (Artery) வீக்கம் அடைவதால் ஏற்படும் எனத் தெரிகிறது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் ரத்தப்போக்கு அல்லது வாதம் ஏற்படும் எனத் தெரிகிறது. மூளை, முழங்காலின் பின்புறம், குடல் போன்ற இடங்களில் இந்த பாதிப்பு ஏற்படுமாம். பாதிப்பின் இடத்தை பொறுத்தே சிகிச்சை மேற்கொள்ளப்படுமாம்.
தற்போது பாம்பே ஜெயஸ்ரீக்கு மருத்துவர்கள் ‘கீ ஹோல்’ அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். மேலும், மருத்துவ சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைத்து வருவதாகவும். அவரது ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை எதிர்பார்ப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடல்நலன் தேறியதும் சென்னை திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெல்லிசை பாடலுக்காக அறியப்படுபவர் பாம்பே ஜெயஸ்ரீ. பத்மஸ்ரீ விருது பெற்றுள்ளார். சங்கீத கலாநிதி விருது வழங்கப்படுவதாகவும் மியூசிக் அகாடமி சமீபத்தில் அறிவித்தது. பிரிட்டனில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் சென்றுள்ளார். இந்த நிலையில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.