எரிபொருள் விலை திருத்தத்தை தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணத்தை இன்று முதல் குறைக்க அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
முதல் மற்றும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று முதல் முதல் கிலோமீட்டருக்கு ரூ.100 ஆகவும், இரண்டாவது கிலோமீட்டருக்கு ரூ.80 ஆகவும் கட்டணம் வசூலிக்கப்படும்.
எவ்வாறாயினும், குறித்த அறிவிப்பின் பிரகாரம் கட்டணத்தை குறைக்குமாறு மீட்டர் டாக்சி சாரதிகளிடம் சங்கம் இன்று கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, தமது வாராந்த எரிபொருள் ஒதுக்கீட்டை 15 லீற்றராக அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் மின்வலு எரிசக்தி அமைச்சரிடம் சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
பலமுறை கோரிக்கை விடுத்தும், அமைச்சரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், எரிபொருள் விலை குறைப்பு தொடர்பான தீர்மானத்துடன், வாடகை வண்டி கட்டணத்தை குறைத்து நுகர்வோருக்கு அந்த சலுகையை வழங்க முச்சக்கர வண்டி சங்கம் தீர்மானித்துள்ளதாக தர்மசேகர தெரிவித்தார்.
முன்னர் முச்சக்கர வண்டியில் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 120 மற்றும் இரண்டாவது கிலோமீட்டருக்கு கட்டணம் ரூ.100 ஆகவும் இருந்தது.