தமிழ் திரையுலகில் 1990-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா. பம்பாய், இந்தியன், முதல்வன், ஆளவந்தான் உள்ளிட்ட வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார்.
கடைசியாக 2002-ல் வெளியான பாபா படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து இருந்தார். இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்த நிலையில் பாபா படத்தின் தோல்வியால் தென்னிந்திய படங்களில் மார்க்கெட் இழந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து மனிஷா கொய்ராலா அளித்துள்ள பேட்டியில், “தென்னிந்திய திரையுலகில் எனக்கு அதிக படவாய்ப்புகள் வந்தன. ஆனால் ரஜினிகாந்துடன் நடித்த பாபா எனக்கு கடைசி படமாக அமைந்து விட்டது.
அந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு வைத்து இருந்தேன். ஆனால் பாபா படம் தோல்வி அடைந்ததால் எனது சினிமா வாழ்க்கையும் முடிவுக்கு வந்தது. பாபா படத்துக்கு முன்பு நிறைய தென்னிந்திய பட வாய்ப்புகள் வந்தன.
அது தோல்வி அடைந்த பிறகு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. 20 ஆண்டுகளுக்கு பிறகு பாபா படத்தை மீண்டும் ரிலீஸ் செய்தபோது வெற்றி பெற்றுள்ளது. இது மகிழ்ச்சி அளித்தது. நானும் படத்தை பார்த்தேன்” என்று கூறியுள்ளார்.