தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் (Parliamentary Tamil Caucus) ஒன்றை பாராளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்.பி, இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்க தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்பி, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் த. சித்தார்த்தன் எம்பி, தமிழ் மக்கள் கூட்டணி செயலாளர் நாயகம் சீ. வி. விக்கினேஸ்வரன் எம்பி ஆகியோருக்கு மின்னஞ்சல் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவர்கள் மற்றும் பங்காளி கட்சி தலைவர்களான பழனி திகாம்பரம் எம்பி, வே. இராதாகிருஷ்ணன் எம்பி ஆகியோரின் உடன்பாட்டுடன் இந்த அழைப்பை விடுப்பதாகவும் தமுகூ தலைவர் மனோ கணேசன் எம்பி மேலும் தெரிவித்துள்ளார் என தெரிய வருகிறது.
இது தொடர்பில் வினவிய போது, மனோ எம்பி கூறியதாவது,
முதற்கட்டமாக மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் எம்பி, சித்தார்த்தன் எம்பி, சீ. வி. விக்கினேஸ்வரன் எம்பி ஆகியோருக்கு அவர்களது கட்சி பதவிகளை விளித்து இந்த அழைப்பை விடுத்துள்ளேன். தொலைபேசியிலும் உரையாடி உள்ளேன். எமது கூட்டணியின் தலைமைகுழு உறுப்பினர்களான பழனி திகாம்பரம் எம்பி, வே. இராதாகிருஷ்ணன் எம்பி ஆகியோரிடமும் உரையாடி உள்ளேன்.
எனது நோக்கம், இலங்கை பாராளுமன்றத்தில், தமிழ் பாராளுமன்ற அரங்கம் (Parliamentary Tamil Caucus) என்ற அமைப்பை உருவாக்குவதாகும்.
இதுபற்றி நான் பல்லாண்டுகளுக்கு முன்பே கலந்துரையாடி உள்ளேன். எனினும் அன்று நிலவிய அரசியல் சூழல் காரணமாக அது அன்று சாத்தியமாகவில்லை. இன்று அதற்கான சாதகமான அரசியல் சூழல் உருவாகி வருவதாக நினைக்கிறேன்.